பிச்சுப் போட்ட பொரட்டாவும் கொதிக்க கொதிக்க சால்னாவும் !!!

 பிச்சுப் போட்ட பொரட்டாவும் கொதிக்க கொதிக்க சால்னாவும் !!!

இது ஒரு நீண்ண்ண்ட பதிவு ( என்னய ஒங்க தாயா புள்ளயா நெனச்சு மன்னிச்சுக்கோங்கோ!! )



79 - 80 களில் ஆறாப்பு படிக்கும் போது எங்க அத்தா வாலண்டியரா ஒரு கால் சைக்கிள் ( அரைவண்டிக்கும் சிறியது ) வாங்கிக் கொடுத்தாக..பரால்லயே அப்டின்டு நல்லா பழவுனேன்...கடேசில அது ..அதேன் அந்த சைக்கிள்தேன் எதுக்கு வாங்குனாருன்னா உப்பூரணி கரையில் உள்ள மம்மசா கடையில் பொரட்டா வாங்கவும் , பேட்டையிலே கறி மீன் வாங்கவும் , வேலுச்சாமி சாரு ஐஸ் பேக்டரில நோம்புக்கு ஐஸ் வாங்கவும் ஊட மாட ஒதவுன்னுங்குற ஒரே காரணத்துக்குத்தேன்...அப்டிங்குறது தெரிஞ்சவொடனே ரெம்ப பெருமைப்பட்டேன்...
காலைல எந்திரிச்சு பல்லு வெலக்குறேனோ இல்லையோ பத்து ஓவாயக் குடுத்து பரட்டா வாங்க அனுப்பிருவாவ எங்க அத்தா இவுக... உப்பூரணி எதுக்க ஒரு கூரை கடையில் ஒசப்பா பொரட்டாவ வீசிக்கிட்டே " வாங்கன்னு ஆனா பானா..நொப்பன் எத்துன பொரட்டா கேட்டாய்ன் "அப்டின்னு ஒரு இழுவையப் போடுவாக. அதுக்கு.நான் " அஞ்சுதேன் ஒசாப்பா அப்டின்டு சொன்னவொடனே சுடச்சுட வாழை எலையில பொரட்டாவ கெட்டி கொதிக்க கொதிக்க சால்னாவ சிலுவர் டேப்புல ஊத்திக்குடுத்து பாத்துப் போப்பேன் என்பார் பரிவாக...!!
அதை வாங்கிகொண்டு பஞ்சாப் பறந்து வந்து அத்தா சாப்புடுற எடத்துல வெச்சிட்டு எதுத்த திண்ணையில இருந்து எட்டிப் பாப்பேன்...அவுக 3 1/2 பரட்டாவ தின்டுட்டு எலையோட மிச்சப் பரட்டாவயும் இம்புட்டு சால்னாவையும் ஓரங்கட்டி வெச்சிருவாக..எனக்கு அம்புட்டு குஷி...எலையோட வாசத்தோட ஒரே மூச்சுல சாப்புட்டு முடிச்சிட்டு காலை ச்சாப்பாட்டுக்கு அடுப்பாங்கரைக்கு போய்ருவேன் ( பசிக்கும்ல ...)



அடுத்து 7,8 படிக்கும்போது ஆனா பானா அலுமாசல்ல ஆட்டய போட்ட அஞ்சு ருவ்வாயும் , ஈஸ்கனியப்பா ரைஸ் மில்ல உஸ்க்கா போட்ட சில பல சில்ர காசுகளையும் எடுத்துக்கிட்டு அபிராமம் பஸ் ஸ்டாண்டுல கம்மாக்கரையில உள்ள "எவரெஸ்ட் புரோட்டா ஸ்டால் " (இப்ப உள்ள அய்யா தேவர் சிலைக்கு பக்கத்துல) போய்ருவம்.. மஜீதோ , மஜீது தம்பியோன்னு ஞாபகமில்ல...பொரட்டாவ அப்டி பிச்சுப் போட்டுட்டு , சுடச்சுட சால்னாவ ஊத்துவாவ பாருங்க இப்பவும் அந்த சால்னா வாசம் நினைவுக்கு வருகிறது..
கொய்யாலே.. பொரட்டாவ நாக்குத் தட்டிட்டு " மகமாயி தேட்டருக்கு உள்ளே போயி ( வெரச போனாத்தேன் பெரிய ஒட்டுப்பீடி கெடைக்கிம் ) மீசிங் போடுறதுக்குள்ள மண்ணக் குமிச்சு ஒக்காந்து ஒட்டுப் பீடிய குடிக்கிற சொகம் இப்ப 555 சிகிரெட் குடிச்சாக் கூட கெடைக்க மாட்டிக்குது ஏய்ய்ன்ன்ன்ன்ன்.....!!!
அம்மூருல ஒவ்வொரு பொரட்டாவுக்கும் , ஒவ்வொரு சால்னாவுக்கும் ஒரு டேஸ்ட்...ஒண்ணுக்கு போட்டியா ஒண்ணு வராது..தனித் தனி ட்ராக்.. அம்ம காசாண்ணே பிராட்டா ஒரு டேஸ்ட்டுன்னா அம்ம முத்தலிவு மாமு பொரட்டா ஒரு டேஸ்ட்டு...முன்னே கூறிய ஒசப்பா டேஸ்ட் ஒரு ரகம்... ஈருபத்தி செய்யது மாமு டேஸ்ட் வேறு ரகம்..( எம்சியாரு , சிவாசி , அசினிகாந்தம் , கமலகாசம் படம் மாறின்டு வெச்சுக்கிருவம் ) இப்ப நம்ம கஞ்சி செய்யதண்ணேய்ன் , மற்றும் நம் ஒறவினர் சர்தார் அண்ணன் ,MSM சாகுல் அண்ணன் கடை, மதனா மச்சாய்ங். வைத்தீ., ஏ ஒன் பிராட்டாக்கள் தனி ரகம்..( விடுபட்டதை கமெண்டுல எழுவுங்க..... )
நான் எளையாங்குடில காலேசு படிக்கம் போது வாட்சாஹோட்டல் ,இபுறாகீம் ஓட்டல் பரட்டா ,சால்னாவையும், , கம்மாக்கரை தாண்டி இருந்த மம்மி ஓட்டல் ( மாடியில்தான் என் ரூம்மு) பரட்டாவயும் எப்படி கையாண்டேன் என்பதை நண்பர்கள் மன்சூர்,சகுபர் ,மன்சூர் அண்ணன்கள், மற்றும் என் மச்சான் ஹாருனையும் கேட்டால் தெரியும்..
அம்மூரு பொரட்டா மதுராசு , சவுதி , சிங்கப்பூரு , மலேசியா போன்ற ஊர்களுக்கும் போன , போய்க்கொண்டிருக்கும் , போவப்போகும் சரித்திரம் ஊரறியும் என்பதில் ஐயமில்லை.
தொந்தி டீ.விக்காக..ஒளிப்பதிவாளர் ஒசய்ங்கனியுடன் உம்மாங்கனி மயன்..நன்றி..!!
பின் குறிப்பு : ஆனா பானா அலுமாசல் ஆட்டை மற்றும் மிசின் கல்லாவில் சில்ரை உஸ்க்கா போட்ட வழக்க்கில் குட்டி மாமுவுக்கும் , சாவுலுக்கும் அடுத்த நாள் முதுகில் பூரியாம் பாத்தியா ஓதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
மாவு மிச்சம் கிச்சம் இருந்தா அடுத்து ஒரு தொடர்ச்சிய போஸ்ட்டா போடுவம்,,,

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive