ஜமான் அண்ணன் ஒத்தெல்லோ நாடகம்

 ஜமான் அண்ணன் ஒத்தெல்லோ நாடகம் , தெக்கூட்டு புகாரி மச்சான் மற்றும் கருணாநிதியின் கான மலர்கள் !!!!

.









.நீண்ட நாளாக ஒரு பதிவு பாக்கி இருந்துகொண்டே இருந்தது..நானும் எப்படியாவது நேரம் ஒதுக்கி முடித்து விடவேண்டும் என்று நினைக்க அசய்ன் இழு ஒசய்ன் தள்ளுன்டு புது வருசம் பொறந்துருச்சு...இனிமே உட்டைன்டா ஊசக்கஞ்சியா போய்ரும்டா உம்மாங்கனி மயனே அப்டின்டு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்டு இப்பவே எழுதுறேன்....
.
.1970 களின் இறுதி மற்றும் 1980 களின் ஆரம்பம் தான் எங்கள் பள்ளி வாழ்க்கை...!!
..
ஸ்டெப் கட்டிங்க்ல ஆரம்பிச்சு டிஸ்கோ கட்டிங்ல பயணிச்சு பங்க் கட்டிங்ல பரவசித்து இப்ப அட்டாக் கட்டிங்கும் பாத்த ஒரே கரகாட்ட கோஷ்ட்டி அம்ம கோஷ்ட்டிதேய்ன்...அதே மாறி பெல்சு பேண்ட்ல ரோடு பெருக்கி , டைட்ஸ் பேண்டுல டண்டனக்கா போட்டு பலூன் பேக்கில காத்து வாங்கி மறுபடியும் பெல்ச தொட்ட பெருங்கூட்டம் அம்ம கூட்டம்..!!!
.படிப்பு , படிப்பு என்று மிசின் கணக்கட்டா ஓடுன பள்ளி நாட்களில் எங்கள் வசந்த கால நதிகளில் மின்னும் வைர மணி நீரலைகள் தான் மீலாது விழா , இலக்கிய மன்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா..!!
.
.சங்கு ஊட்டு சாத்துக்குடிகளும் , அண்டா தாத்தா உருட்டிய லட்டு உருண்டைகளும் நவ்வா மரம் அருகே உள்ள வகுப்பில் மாணவர்கள் நாவினைத் தடவிப்பார்க்க தவமிருக்கும்...
.
.மீலாது விழாவில் தெக்கூட்டு புகாரி மச்சாய்ன் பாடிய "ஈச்சை மரத்து இன்பச்சோலையில் நபி நாதரை "!!! என்ற கானமும் நண்பன் கருணாநிதியின் குரலில் ( முத்துராமலிங்கம் வாத்தியார் மகன்) இலக்கிய மன்ற ஆண்டு விழாவில் "மருதமலை மாமணியே முருகைய்யா..!!! என்ற பாடலும் இன்றும் என் காதுகளில் ரீங்காரம் இடுகிறது...புத்தகங்கள் நிரம்பிய காக்கி பைகளையும் , மஞ்சள் பைகளையும் தட்டி நாங்கள் அவர்கள் இருவரையும் உற்சாகப் படுத்திய நினைவுகள் ஆனந்தக் கண்ணீருடன் அடி மனதை வருடுகிறது...
.
.
.
சுமார் மூஞ்சி குமாரான நானும் மேடை ஏறவேண்டும் என்ற பொல்லா ஆசையில் சபாரி சூட்டுடன் ( படந்தேய்ன் ) " சிந்து நதியின் மிசை நிலவினிலே " என பாடி ஆரம்பித்தேன்..ஒரு புளோவா போய்க்கிட்டு இருந்தது பாட்டு , "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் " என்ற வரி வரை மேலே பார்த்து பாடியவன் திடீரென எதிரே உள்ள மக்கள் திரளைப் பார்த்து விட்டேன்...
.
.
அப்புறம். என்ன....வண்டி பாலத்தைத் தாண்டல....நல்லாசிரியர் காதர் மைதீன் சார்தான் "ஆனா பானா பரவாயில்ல....அடுத்த தடவ முயற்சி பண்ணு என்று தட்டிக்குடுத்து அனுப்பினார்...அதுக்கடுத்து பாட்டோட மல்லுக்கட்டுறத உட்டுட்டு அல்லிக்குத்து பைனா நெல்லுக்குத்து சோறு அப்டின்டு கலியாண ஊட்டு மஞ்சச் சோறுகள சாப்புட்டு மனச தேத்திக்கிட்டேன்...
.
.
.வெள்ளை மனம் கொண்ட ஜமான் அண்ணன் முகத்தில் கரிய நிறம் பூசிக்கொண்டு கையில் கத்தியுடன் நடித்த ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லொ நாடகம் குற்றால அருவியில் குளித்து பழகிய எங்களை நயகரா நீர்வீழ்ச்சியில் நனைந்த சுகத்தைக் கொடுத்தது..அந்த ஆங்கில நாடகத்தை பயிற்று வித்த ஆசான் முஹம்மது ஹில்மி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை விழி ஓரக் கண்ணீரைத் துடைக்காமல் அருவியாய் பொழிய விட்டு அன்புடன் அளிக்கின்றேன்...
.
.
.ஈசுப் சார் மகன் ஜாகிர் "பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி " என்ற பாட்டுக்கு சுழன்டு சுழன்டு ஆடிய ஆட்டம்..நண்பர் ஒருவரின் குரலில் "இது ஒரு பொன் மாலைப் பொழுது " பாடல் இன்று நினைத்தாலும் உள்ளம் உவகை கொள்கிறது..
.
.அடுத்து விளையாட்டு ஆண்டு விழா....அந்த ஐஸ்கூல் கிரவுண்டு எங்களை ஈன்றெடுக்காத இரண்டாம் தாய் மடி...அந்த அன்பு தாய் மடியில் கீழக்குளத்தார் யாசீன் அண்ணனில் துவங்கி ,புல்லந்தை போஸ் அண்ணன் கிறங்கி , ஒப்பிலான் காதர் அண்ணன் ( ஷாநவாஸ் ) உறங்கி ,பாரதி அண்ணன் , உடையார் அண்ணன் , ஜோதி அண்ணன் , அல்தாப் அண்ணன் ,முத்துவேலு அண்ணன் வரை மயங்கி , திப்பு சுல்த்தான் ரம்ஜான் அலி வரை நெருங்கி , தவழ்ந்து புரண்ட மகிழ்ந்து மலர்ந்த மாபெரும் நாட்களை மறக்க இயலுமா.....நாளை மறுமை மைதான மந்தைகளாய் கூடுவதற்கு இது ஒரு ஒத்திகை தானாம்..எனவே நமக்கு இது தாய்மைதானாம்..ஆம்....தாய் மைதானம்.....
.
.
.
.உசையாள் பானு டீச்சரின் வழிகாட்டலில் நங்கையர்கள் ஒரு சேர "லெஸிம் என்னும் பயிற்சி செய்யும் போது சிலிங்..சிலிங் என்ற நாதம் விண்ணில் சிலு சிலுக்கும்....தங்க ராசு சார் தலைமையில் காளையர்கள் கைகளில் தம்புல்ஸ் மரக்கட்டைகளின் ஓசைகள் தாலாட்டு பாடவைக்கும்..!!!.
.
.
.
.அடுத்து மாணவ மாணவியர்கள் போட்டி முடிந்ததும் ஆசிரியர் அலுவலர் விளையாட்டு போட்டிகள் நடக்கும்...கமாண்டெட்ரி பகுதியில் அமர்ந்து கொண்டு அம்ம ஈசுப் சாரும் , சந்திர சேகர் சாரும் ஓட்டப் போட்டியில் ஓடும் ஆண்டி அண்ணன் , எகியா பாய் ,மலை மேகு அண்ணன் ,நெய்னாம்து அண்ணன் ஆகியோரை ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுவார்கள்...சாம்பிள் ஒன்று...."எப்படியும் எகியா பாய் உலக சாதனையை முறியடிப்பார் என்று எதிர் பார்க்கிறோம் என ஈசுப் சார் சொன்னது தான் பாக்கி ,எய்யா பாயண்ணே கிரவுண்ட உட்டு வெளியே சங்கத்து வழியா பூந்து ஐஸ்கூல் கேட்டு பக்கத்துல ஒளிஞ்சிருவாரு...ரசிகர்கள் கூட்டம் அவரை வழி மேல் விழி வைத்துத் தேடும்..
.
இன்று இதை அசை போட்டுப் பார்க்கும் போது எத்தனை வாழ்க்கை பாடங்கள் , எத்தனை கண்ணீர் நேசங்கள் ,எத்தனை பழகிய பாசங்கள்... எத்தனை கவிதைச்சாரங்கள் , எத்தனை இனக்கவர்ச்சி நாணங்கள் ,எத்தனை பொய் கோபங்கள் , எத்தனை சமரசங்கள் , எத்தனை பிரிவின் துயரங்கள்..திரும்பிப் பார்க்கிறேன்...திகைத்துப் போகிறேன்...!!!
.
.
.
.
."மனிதன் நினைப்பதுண்டு.. வாழ்வு நிலைக்கும் என்று...
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று.....!!!
.
.
."கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடா..!!!அவனே விளையாடி விட்டானடா..!!!
.
இனி .இருக்கும் காலம் வரை சுரக்கும் நினைவுகளை
சொல்லிச் சுவைத்து சுற்றம் நிறைத்து
சோகம் மறந்து ராகம் பாடுவோம்..
.
.அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive