அபிராமம் டி - 15 கிரிக்கெட் மேட்ச் நினைவலைகள் ...!!!!

 அபிராமம் டி - 15 கிரிக்கெட் மேட்ச் நினைவலைகள் ...!!!!

.
.
.
அன்று "சாபென்ன பே பே சிக்ஸ்" என்றும் "சாட் பூட் த்ரீ" என்றும் கைகளை நீட்டி செவுச்சு கிட்டி,பம்பரம்,கம்பு தள்ளி,ஆபிதம்,மணியாபிதம்,எஸ்சார் இடி எஸ்சார் ஒதை,பெந்தா,சீச்சுக்கல்லு, தாப்புலாங்குச்சி,ஒண்ணாங்குலி, இம்புட்டு பணம் தாரேன் உடுடா துலுக்கா,என சீசனுக்கு அம்புட்டு வெளாட்டு வெளான்டாலும் இந்த கிரிக்கெட் மட்டும் எங்களை மகுடியில் மயங்கிய பாம்புகளாய் கட்டிப்போட்டது என்பது உண்மைதான்..
..மீராலி முஜீப் வீட்டில் வால்வு செட் ரேடியோவில் கிரிக்கெட் கமாண்டெரி கேட்கும் போது ஏக்,தோ,தீன்,சார்,பாஞ்ச்,சேர்,சாத்,ஆட்,நவ்,தஸ்,கியாரா,பாரா,தேரா இந்த நம்பர்களைக் கவனித்து குறித்து குத்துமதிப்பா ஸ்கோர் அறிந்த ஆர்வம் இன்று ஹெச்டி, 4கே டீவில ஸ்கோர் துல்லியமா பார்க்கும்போது வரவில்லை..
.
.ஊரில் மூன்று வீடுகளில் மட்டும் டீ.வி இருக்கும்..அதுவும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மேட்ச் அதிகாலை 2.30க்கு தொடங்கும்.அதை அந்த மூன்று வீட்டாரையும் கெஞ்சிக் கூத்தாடி வாசலில் ,ஜன்னலில் நின்று முழு மேட்சையும் பார்ப்போம்..
.
எல்லோரும் இந்தியா செயிக்க ஆசப்படும்போது ஒத்த மயன் நாகூர் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் பேசுவியான்..அதுனால அவன செல்லையிலேயே சாத்தி ஓரமா நிப்பாட்டிருவம்..அவன் தனியா டூஜான்,கஸ் லோகி ,ரிச்சர்ட்ஸ் ,க்ளைவ் லாய்ட்,மால்கம் மார்சல் எனக் கூவிக்கிட்டே ஓரமா நிப்பாய்ன்...
.
.
.ரஜினி , கமல் காம்பினேசன் மாறி எங்களுக்குள் கவாஸ்கர் ,ஸ்ரீகாந்த் ரசிகர்கள்..ஓன் ஆளு அவுட்டு..இப்ப எங்க ஸ்ரீகாந்த் வெளுவ கவனி என்று சுவராசியமா போவும் மேட்ச்சு வியூகங்கள்....
.
.
.
மிசின்கார ரோடுதான் எங்களுக்கு சேப்பாக்கம் , சந்தைக்கடை ரோடே ஈடன் கார்டன்,சைக்கிள் ட்யூப்பை நறுக்கி தாளைப் பந்தாக உருட்டி சுத்தி சுத்தி ட்யூப்பை மாட்டி பந்து ரெடியான செய்தியை அலாவுதீன் (ஊதி ) சொன்னதுதான் பாக்கி மேட்ச் ஆரம்பிச்சிடும்..ட்யூப் உருவி உழுந்தா எடுத்துக் குடுக்க ஒரு பொடுசு தெர்டுமேனா நிக்கும்....
.
.
.
.கொக்க முட்டாய் கப்,கல்லமுட்டாய் கப் , 5 ரூவா கப் என கோழி கூவுனவொன்ன ஆரம்பிச்ச டோர்னமென்ட் எவனாவது ஏழ்ரைய கூட்டுற வரைக்கிம் அது பாட்டுக்கு நடக்கும்..ஏழ்ரையில ரப்பர் கார்க் பந்து துண்டு துண்டா கடித்துத் துப்பப்பட்டு முள்ளுக் காட்டுக்குள்ளாக்க எறியப்படும்..
.
.
.இப்படி பயணித்த அம்ம கிரிக்கெட்டு ஐஸ்கூலில் வெளாட ஆரம்பிச்ச போது தன் ஸ்டைலை மாற்றிக்கொண்டது...கைலி உடுத்தி வெளாடக்கூடாது..பேன்ட்,ட்ராயர் மட்டும் அணியவேண்டும்..என்று நிறம் மாறிக்கொண்டது…(கைலியை பேண்ட் மாறி கட்டி காதர்மைதீன் சாரிடம் டிக்கியில் டின் கட்டியவர்கள் ரெம்ப பேரு...அம்மளுந்தேய்ன்...)
.
.
..சைக்கிள் டியூப் பந்து , விக்கி பாலாகவும்,ரப்பர் கார்க் பாலாகவும் உருமாறியது...மரக்கட்டை பேட்டுகள் ரன்னர் பேட்டாகிப் போனது..ஒரே ஒரு புது பேட் மட்டும் இங்கும் அங்கும் பேட் சேஞ்ச் என்ற விளிப்பில் மாறும்..
.
.
.
.அந்த சமயம் அபிராமம் டவுன் டீம் என்ற அணியை மரியாதைக்குரிய அலியப்பா சேக் அண்ணன்,பூபதி அண்ணன்,நத்தம் தாஸ் மாமா மயன் முத்துக்குமார் அண்ணன்,அவரின் தம்பி,உறவினர் ராஜா,பன்னீர் அண்ணன்,ரமேஷ் பாபு அண்ணன்,சேமாது சிக்கந்தர் அண்ணன் நெய்னாரப்பா பேரன் மீரா,,மாப்ள கலைவாணன்,முத்து ஜாகிர்,சகுபர்,ஜெய்சங்கர் ஆகியோர் உருவாக்கினர்.முறைப்படி , விதிப்படி ஆடும் ஆட்டத்தை எங்களுக்கு காட்டினர்.. இது தான் அபிராமத்தின் முதல் கவுன்ட்டி கிரிக்கெட் டீம்...
.
.
.எங்கள் ஆர்வத்தைக் கண்ணுற்ற "கிப்ஸ்" மார்க் குழுமத்தினர் ஒரு டோர்ணமென்ட் நடத்தினர்..பல ஊர்களில் இருந்து அணியினர் அழைக்கப்பட்டனர்,,குறிப்பாக மதுரை "டி.வி.எஸ் அணி , மதுரை ப்ரீக் அணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை..
.
.
பச்சை மேட் விரிக்கப்பட்டு டோர்ணமென்ட் கோலாகலமாக நடந்தது...கமுதி பொன்னையன் சிக்கந்தர் மற்றும் மீரா பௌலிங் ஸ்பீடுகள் ஆச்சர்யமாகப் பேசப்பட்டன.முத்து ஜாகிர்,சகுபரின் பச்சை நிற ஹெல்மெட் மற்றும் பேடு செட்ஸ் வியக்க வைத்தது.. டிரிங்ஸ் ப்ரேக் விட்டு தட்டுல நன்னாரி சர்வத்தை கொண்டுவந்து குடுப்பாக...அதுனால டிரிங்ஸ் பிரேக் அப்ப கிரவுண்டுல நின்டா சர்வத்து கெடைக்கிம்ட்டு அப்ப பேட்டிங் எறங்க அம்ம சாதி சனங்க ரெம்ப ஆசைப்படுவம்....
,
.அம்பயர்கள் வேலுச்சாமி சாரும் , நண்பன் ஷேக் ஹமீதும் அசத்தினார்கள்...
.
.நத்தம் டீம் என்.சி.சி என்ற பெயரில் களமிறங்கியது. நான் லெப்ட் ஆம் பௌலர்...ஒரு மேட்சுல 4 விக்கெட் எடுத்தேன்..அப்ப அம்பயரா நின்ற வேலுச்சாமி சார்.."பீ.டி பிருடுல கிரவுண்டு பக்கமே தலை காட்டாதவய்ங்கெல்லாம் நல்லா வெளாடுறாய்ங்கடா..." அப்டின்டு சொன்னார்...அம்ம புதுப் பொண்ணு மாறி வெக்கப்பட்டம்.....புதூர் டீம் ,அகத்தாரிருப்பு டீம் என மேட்ச் களை கட்டும்..சில வேளைகளில் இரண்டு டீம்கள் ஒன்றாக மாறி அயலூர் டீமிடம் விளையாடும்..
.
.
.அபிராமம் , நத்தம் மற்றும் சுற்றுப்பட்டு ஊர்மக்களும் ஐஸ்கூலில் ஒன்று கூடி கண்டுகளித்து வீரர்களை உற்சாகப் படுத்துவர்.. பக்கத்துல குடத்துல தண்ணி இருக்கும் ( தண்ணி தவிக்கும்ல..)
.
.யார் பைனலில் கப் வாங்கினாலும் கொண்டாடி மகிழ்விப்போம்..அந்த கப்பை வெற்றி பெற்ற அணி கிப்ஸ் யூனுஸ் அண்ணன் , யூசுப் கான் அண்ணன் மற்றும் அக்பர் அண்ணன் கைகளில் இருந்து பெறும்போது நாங்கள் பெறுவது போல் பூரிப்பு அடைவோம்...
.
.ஒரு தடவை அபிராமம் நத்தம் உசுப்பு ஏத்திங் பார்முலாவ ஊஸ் பண்ணி மகாராஜா ஜுனைது அண்ணனை நாமல்லாம் டோர்ணமென்ட் நடத்த முடியுமாண்ணே அப்டின்னு ஏத்தி விட்டு அவர் ஒடனே ,நடத்திக்காட்டுவோம் மேன்...என்று ஒயிட் அண்டு ஒயிட்டில் கிரவுண்டில் இறங்கி நின்று முழு டோர்ணமென்ட்டை நடத்திக்கொடுத்து அனைவர் உள்ளங்களிலும் இடம் பிடித்தார்...நல்ல மனிதர்...
.
.
இப்படி நாங்கள் பயணித்த கிரிக்கெட் பயணம் இன்று மேட்ச் டீ.வில பார்ப்பதோடு நின்றுவிட்டது...கண்டிப்பாக அது போல் டோர்ணமென்டுகள் இனியும் நடக்க வேண்டும்...இன்பத்தில் களிக்க வேண்டும்...
.
.நீதி : எந்திர வாழ்வை சுந்தர வாழ்வாய் மாற்ற இது போன்ற நினைவூட்டல்கள் காலத்தின் கட்டாயம்...!!!
.
.அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது..

ஜமான் அண்ணன் ஒத்தெல்லோ நாடகம்

 ஜமான் அண்ணன் ஒத்தெல்லோ நாடகம் , தெக்கூட்டு புகாரி மச்சான் மற்றும் கருணாநிதியின் கான மலர்கள் !!!!

.

.நீண்ட நாளாக ஒரு பதிவு பாக்கி இருந்துகொண்டே இருந்தது..நானும் எப்படியாவது நேரம் ஒதுக்கி முடித்து விடவேண்டும் என்று நினைக்க அசய்ன் இழு ஒசய்ன் தள்ளுன்டு புது வருசம் பொறந்துருச்சு...இனிமே உட்டைன்டா ஊசக்கஞ்சியா போய்ரும்டா உம்மாங்கனி மயனே அப்டின்டு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்டு இப்பவே எழுதுறேன்....
.
.1970 களின் இறுதி மற்றும் 1980 களின் ஆரம்பம் தான் எங்கள் பள்ளி வாழ்க்கை...!!
..
ஸ்டெப் கட்டிங்க்ல ஆரம்பிச்சு டிஸ்கோ கட்டிங்ல பயணிச்சு பங்க் கட்டிங்ல பரவசித்து இப்ப அட்டாக் கட்டிங்கும் பாத்த ஒரே கரகாட்ட கோஷ்ட்டி அம்ம கோஷ்ட்டிதேய்ன்...அதே மாறி பெல்சு பேண்ட்ல ரோடு பெருக்கி , டைட்ஸ் பேண்டுல டண்டனக்கா போட்டு பலூன் பேக்கில காத்து வாங்கி மறுபடியும் பெல்ச தொட்ட பெருங்கூட்டம் அம்ம கூட்டம்..!!!
.படிப்பு , படிப்பு என்று மிசின் கணக்கட்டா ஓடுன பள்ளி நாட்களில் எங்கள் வசந்த கால நதிகளில் மின்னும் வைர மணி நீரலைகள் தான் மீலாது விழா , இலக்கிய மன்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா..!!
.
.சங்கு ஊட்டு சாத்துக்குடிகளும் , அண்டா தாத்தா உருட்டிய லட்டு உருண்டைகளும் நவ்வா மரம் அருகே உள்ள வகுப்பில் மாணவர்கள் நாவினைத் தடவிப்பார்க்க தவமிருக்கும்...
.
.மீலாது விழாவில் தெக்கூட்டு புகாரி மச்சாய்ன் பாடிய "ஈச்சை மரத்து இன்பச்சோலையில் நபி நாதரை "!!! என்ற கானமும் நண்பன் கருணாநிதியின் குரலில் ( முத்துராமலிங்கம் வாத்தியார் மகன்) இலக்கிய மன்ற ஆண்டு விழாவில் "மருதமலை மாமணியே முருகைய்யா..!!! என்ற பாடலும் இன்றும் என் காதுகளில் ரீங்காரம் இடுகிறது...புத்தகங்கள் நிரம்பிய காக்கி பைகளையும் , மஞ்சள் பைகளையும் தட்டி நாங்கள் அவர்கள் இருவரையும் உற்சாகப் படுத்திய நினைவுகள் ஆனந்தக் கண்ணீருடன் அடி மனதை வருடுகிறது...
.
.
.
சுமார் மூஞ்சி குமாரான நானும் மேடை ஏறவேண்டும் என்ற பொல்லா ஆசையில் சபாரி சூட்டுடன் ( படந்தேய்ன் ) " சிந்து நதியின் மிசை நிலவினிலே " என பாடி ஆரம்பித்தேன்..ஒரு புளோவா போய்க்கிட்டு இருந்தது பாட்டு , "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் " என்ற வரி வரை மேலே பார்த்து பாடியவன் திடீரென எதிரே உள்ள மக்கள் திரளைப் பார்த்து விட்டேன்...
.
.
அப்புறம். என்ன....வண்டி பாலத்தைத் தாண்டல....நல்லாசிரியர் காதர் மைதீன் சார்தான் "ஆனா பானா பரவாயில்ல....அடுத்த தடவ முயற்சி பண்ணு என்று தட்டிக்குடுத்து அனுப்பினார்...அதுக்கடுத்து பாட்டோட மல்லுக்கட்டுறத உட்டுட்டு அல்லிக்குத்து பைனா நெல்லுக்குத்து சோறு அப்டின்டு கலியாண ஊட்டு மஞ்சச் சோறுகள சாப்புட்டு மனச தேத்திக்கிட்டேன்...
.
.
.வெள்ளை மனம் கொண்ட ஜமான் அண்ணன் முகத்தில் கரிய நிறம் பூசிக்கொண்டு கையில் கத்தியுடன் நடித்த ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லொ நாடகம் குற்றால அருவியில் குளித்து பழகிய எங்களை நயகரா நீர்வீழ்ச்சியில் நனைந்த சுகத்தைக் கொடுத்தது..அந்த ஆங்கில நாடகத்தை பயிற்று வித்த ஆசான் முஹம்மது ஹில்மி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை விழி ஓரக் கண்ணீரைத் துடைக்காமல் அருவியாய் பொழிய விட்டு அன்புடன் அளிக்கின்றேன்...
.
.
.ஈசுப் சார் மகன் ஜாகிர் "பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி " என்ற பாட்டுக்கு சுழன்டு சுழன்டு ஆடிய ஆட்டம்..நண்பர் ஒருவரின் குரலில் "இது ஒரு பொன் மாலைப் பொழுது " பாடல் இன்று நினைத்தாலும் உள்ளம் உவகை கொள்கிறது..
.
.அடுத்து விளையாட்டு ஆண்டு விழா....அந்த ஐஸ்கூல் கிரவுண்டு எங்களை ஈன்றெடுக்காத இரண்டாம் தாய் மடி...அந்த அன்பு தாய் மடியில் கீழக்குளத்தார் யாசீன் அண்ணனில் துவங்கி ,புல்லந்தை போஸ் அண்ணன் கிறங்கி , ஒப்பிலான் காதர் அண்ணன் ( ஷாநவாஸ் ) உறங்கி ,பாரதி அண்ணன் , உடையார் அண்ணன் , ஜோதி அண்ணன் , அல்தாப் அண்ணன் ,முத்துவேலு அண்ணன் வரை மயங்கி , திப்பு சுல்த்தான் ரம்ஜான் அலி வரை நெருங்கி , தவழ்ந்து புரண்ட மகிழ்ந்து மலர்ந்த மாபெரும் நாட்களை மறக்க இயலுமா.....நாளை மறுமை மைதான மந்தைகளாய் கூடுவதற்கு இது ஒரு ஒத்திகை தானாம்..எனவே நமக்கு இது தாய்மைதானாம்..ஆம்....தாய் மைதானம்.....
.
.
.
.உசையாள் பானு டீச்சரின் வழிகாட்டலில் நங்கையர்கள் ஒரு சேர "லெஸிம் என்னும் பயிற்சி செய்யும் போது சிலிங்..சிலிங் என்ற நாதம் விண்ணில் சிலு சிலுக்கும்....தங்க ராசு சார் தலைமையில் காளையர்கள் கைகளில் தம்புல்ஸ் மரக்கட்டைகளின் ஓசைகள் தாலாட்டு பாடவைக்கும்..!!!.
.
.
.
.அடுத்து மாணவ மாணவியர்கள் போட்டி முடிந்ததும் ஆசிரியர் அலுவலர் விளையாட்டு போட்டிகள் நடக்கும்...கமாண்டெட்ரி பகுதியில் அமர்ந்து கொண்டு அம்ம ஈசுப் சாரும் , சந்திர சேகர் சாரும் ஓட்டப் போட்டியில் ஓடும் ஆண்டி அண்ணன் , எகியா பாய் ,மலை மேகு அண்ணன் ,நெய்னாம்து அண்ணன் ஆகியோரை ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுவார்கள்...சாம்பிள் ஒன்று...."எப்படியும் எகியா பாய் உலக சாதனையை முறியடிப்பார் என்று எதிர் பார்க்கிறோம் என ஈசுப் சார் சொன்னது தான் பாக்கி ,எய்யா பாயண்ணே கிரவுண்ட உட்டு வெளியே சங்கத்து வழியா பூந்து ஐஸ்கூல் கேட்டு பக்கத்துல ஒளிஞ்சிருவாரு...ரசிகர்கள் கூட்டம் அவரை வழி மேல் விழி வைத்துத் தேடும்..
.
இன்று இதை அசை போட்டுப் பார்க்கும் போது எத்தனை வாழ்க்கை பாடங்கள் , எத்தனை கண்ணீர் நேசங்கள் ,எத்தனை பழகிய பாசங்கள்... எத்தனை கவிதைச்சாரங்கள் , எத்தனை இனக்கவர்ச்சி நாணங்கள் ,எத்தனை பொய் கோபங்கள் , எத்தனை சமரசங்கள் , எத்தனை பிரிவின் துயரங்கள்..திரும்பிப் பார்க்கிறேன்...திகைத்துப் போகிறேன்...!!!
.
.
.
.
."மனிதன் நினைப்பதுண்டு.. வாழ்வு நிலைக்கும் என்று...
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று.....!!!
.
.
."கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடா..!!!அவனே விளையாடி விட்டானடா..!!!
.
இனி .இருக்கும் காலம் வரை சுரக்கும் நினைவுகளை
சொல்லிச் சுவைத்து சுற்றம் நிறைத்து
சோகம் மறந்து ராகம் பாடுவோம்..
.
.அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது

சங்கு வாப்பா ஒரு சகாப்தம் !!!

 சங்கு வாப்பா ஒரு சகாப்தம் !!!தென் கோடியில் முகவரியில்லாமல் இருந்த நத்தம் அபிராமம் எனும் குக்கிராமத்தில் பிறந்து பர்மிய தேசத்தில் வீறு நடை பயின்று சாரட்டு வண்டியில் சாத்வீகமாய் பவனி வந்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த.தலைப்பாகை நாயகன் துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் மற்றும் மீசைக்கார வித்தகன் விஜயன் அப்துல் ரகிமான் அம்பலம் ஆகியோர் முகவரிக்கே முகவரி எங்கள் நத்தம் அபிராமம் என மூலை முடுக்கெங்கும் முரசறைந்து சொன்ன சரித்திரங்கள் முந்தைய பதிவுகளில் கண்டு கண்மலர்ந்த நமக்கு அதே பர்மிய மண்ணில் அகல் விளக்காய் ஜொலித்து பின்னாளில் இந்திய துணைக்கண்டத்தில் தங்க நிலவாய் பிரகாசித்த சங்கு வாப்பா எனும் சங்கு முகம்மது அபுபக்கர் பெருந்தகை..வரலாறு மனத்துக்கு இதம் தரும் என்பதில் ஐயமில்லை....
.
.
அன்னவர் அவர்கள் கைலிகளின் சக்கரவர்த்தி என்று சாரம் ( கைலி ) உடுத்தும் சான்றோர் அனைவருக்கும் தெரியும். ஆனால் இலக்கியத்தில் கலக்கிய இமயம் என்று 1943 ஆம் ஆண்டு வெளிவந்த நத்தம் இளைஞர்கள் நடத்திய ஒரு மன்றத்தின் 2 ஆம் ஆண்டு நிறைவு மலர் மஞ்சரி ஒன்றினைக் காணக்கிடைத்து களிப்படைந்து வியந்தேன் .....( ஆதாரம் : இணைப்பில் அந்த மலர் மஞ்சரி )
.
.
.அதில் சங்கு வாப்பா அவர்கள் " அறிவு விளக்கத்தின் மூலம் சாந்தி " என்ற கட்டுரையினைப் படைத்திருக்கிறார்கள்...ஆன்மீகத்திலோ அறிவியலிலோ நமக்கு ஏற்படும் ஐயங்களுக்கு அறிவு விளக்கங்கள் மூலமே அமைதி கொண்டு வர இயலும் என்பதை ஆத்மார்த்த வெளிப்பாடாக அந்நூலில் சிற்பியாக செதுக்கி இருக்கிறார்கள்..
.
.
.அன்றைய நத்தத்து வாசிகளுக்கு "சங்கு கிணறு " தன் சுனை நீரை அமுதமாய் வாரி வழங்கியது போல் அறிவுக் கடலில் சங்கமிக்கும் சான்றோர்க்கு பொங்கும் நீராய் , பொலிவாய் , புத்தம் புது நதியின் துள்ளலாய் தன் இலக்கிய உணர்வால் பூரிப்பு ஊட்டிய சங்கு வாப்பா ஒரு சகாப்தமே !!!!!
.
.
.அந்த மலர் மஞ்சரியின் பயன் படுத்தப்பட்ட அந்தக்கால வார்த்தைகளை வாசிக்கும்போது உள்ளம் வெல்லம் தின்ற தித்திப்பில் மெல்ல மெல்ல திளைக்கிறது..அள்ள அள்ள அமுதம் பருகும் ஆனந்தத்தில் மூழ்கி களைக்கிறது...
.
.உதாரணத்துக்கு சில....."யுவர் மன்றம் " , "பராக்கிரமம் , " பந்து மித்திரர் , " இம்மட்டோடு ".......ஆஹா...ஆஹா...!!! அருமை !!!
.
.
.அந்த மஞ்சரியின் கட்டுரைகளோ தசம் ....!!!.அதைப் படிக்கும்போது நம் மனமோ வானம் வசம்...!!!
..
.
."நற்போதனை ( " அறிவு விளக்கத்தின் மூலம் சாந்தி " ) " என்ற தலைப்பில் சங்கு வாப்பாவும் , "பலே ஸி.ஐ.டி " என்ற தலைப்பில் பி.எம்.ஓ ஹமீது என்பாரும் , " இஸ்லாமிய அரசியல் " என்ற தலைப்புடன் துபாஷ் ரஸாக் ( பின்னாளில் டி.எஸ்.பி ) அவர்களும் , " கருணையின் சிகரம் " என்ற தலைப்பில் அ.சே.முத்து முகம்மது அவர்களும் , " தமிழ்த் தாயைத் தாங்குக " என்ற தலைப்பில் துபாஷ் து.கா.யா.அப்துல் ஹமீது ( பின்னாளில் நத்தம் போஸ்ட் மாஸ்டர் ) அவர்களூம் ஐம்பொன்னை உருக்கி அழகு ஆபரணங்கள் படைத்துள்ளனர்.
.
.அடுத்து ஆங்கிலத்தில்
முதல் கட்டுரை எழுதிய திருவாளர் ஷேக் அலி பற்றி தெரிந்தவர்கள் கமெண்டில் எழுதவும்.
.
.2 வது கட்டுரை எழுதியது நூர்தீன் மதாறுப்புலவரின் பேரன் நூர்தீன் ஷேக் பெருந்தகை. (துபாஷ் காதிறு சாகிப்பின் மகள் வழிப்பேரனும் கூட..)
.
.3 வது கட்டுரை எழுதியது சங்கு வாப்பாவின் தங்க பாப்பா சங்கு செய்யது வாப்பா.
.
.4 வது கட்டுரை எழுதியது "தாவுது மார்க் ஏ.ஏ.ஷேக் பரீது என்னும் சொல்லாளர்..
.
.5 வது கட்டுரையை எழுதியது விஜயன் கபூர் அப்பா....
.
.( ஆதாரம் மலர் மஞ்சரி...)
.
.நத்தம் அபிராமத்தின் இலக்கிய ஆன்மீகக் கடலில் கிடைத்த முத்துக்கள் ஏராளம் ஏராளம்...பிரிதொரு நாளில் அவர்களையும் அறிவோம்.இன்ஷா அல்லாஹ்.!!.
.
.
பின் குறிப்பு : 77 வருடத்திற்கு முந்தைய இந்த மலர் மஞ்சரி அப்பளம் போல் நொறுங்கி விடாமல் தங்களது தொழில் நுட்ப உதவியால் அழியாக் கோப்பாக மாற்றித் தந்த தம்பிகள் எஸ். செய்யது முஸ்தபா மற்றும் வி.செ.இ. செய்யது முஹம்மது உவைஸ் ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை வாரி இறைக்கின்றேன் வாச மலராய் வீசி மணம் பரப்ப வாகாய் வாழ்த்துகிறேன்..
.
..அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது..
.
.
..பின் குறிப்பு : இது போன்ற காலத்தால் அழியாத வரலாறுகள் உங்கள் அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தால் தட்டி எழுப்பி இந்த எளியவனிடம் தாருங்கள்..அதை நான் பன்னூறு பேருக்குச் சென்றடைய பதிவிடுகிறேன்..நன்றி..
.
.அ.ப.சாகுல் ஹமீது..

பைபாஸ் பாலமுருகனும் , ஓ.டீ சுல்தானும் -

 பைபாஸ் பாலமுருகனும் , ஓ.டீ சுல்தானும் -

.
மன்னான் மில் மலரும் நினைவுகள் !!!
..90 களின் ஆரம்பத்தில் துருப்புச் சீட்டு வெளாடிவிட்டு துண்டுக்கறி சோத்தை நாக்கு தட்டிவிட்டு , புளிச்சார் வாளியில் தொப்புசாவை திளாவிவிட்டு , மகமாயி தேட்ட்ர் மூடிய பின் சிவா தேட்டர் , ராம்குமார் தேட்டர்களில் சேவுசய்ன் சினிமாக்களை மேயவிட்டு , கம்மாக்கரை , கல்ராம் ஊரணியில் கால்களை உலாவிவிட்டு ஒரு பொறுப்பான 90 கிட்ஸ் என பேரெடுத்து வந்த எங்களுக்கு "அடிச்சாம் பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் " என்ற வடிவேலு வரிகள் போல் வந்தது தான் மன்னான் மில் வேலை..!!!
.
.
.கோப்பரட்டிவ் நெய்னாரப்பா ஊட்டுலதேன் இண்டர்வியூ...கன்சல்டன்ட் ஜீவன் தாஸ் சார் தலைமையில் நடந்தது...எனக்கு டைம் ஆபீஸ் வேலை , என் நண்பர்களுக்கு சில பல வேலை என இண்டர்வியூ பின்னி பெடலெடுத்து முடிந்தது...
.
.
.அப்போ அங்கே எங்களிடம் " ஒங்களுக்கு வேலை ரொம்ப ஈ.சிப்பா... " கீழேயும் ஏ.சி , மேலேயும் ஏ.சி " என்று சொன்னார்கள்...நாங்கள் அங்கே போய் பாத்தவுடன் தான் தெரிஞ்சிச்சு கீழேயும் மேலேயும் ஏ.சி ஆனா நடுவுல ஒரே தூசி...கொய்யாலே பஞ்சு மில்லுல பட்டு மெத்தை போட்டு தூங்கவா மிடியும்...காலைல காதல் பரிசு கமலஹாசன் மாதிரி உள்ளே போய்ட்டு ஊட்டுக்கு திரும்பும் போது 16 வயதினிலே சப்பாணி மாதிரி இழுவையோட வருவோம்...
.
.
ஆனால் அங்கு நாங்கள் பெற்ற அனுபவங்கள் சொல்லி மாளாது...இன்பங்களை அள்ளி மாளாது....
.
.நத்தத்தில் 20 பேருடன் கிளம்பிய சைக்கிள் குழுமம் , அபிராமம் பஸ் ஸ்டாண்டில் 60 பேராக விரிவடைந்து "கிளிங் ...கிளிங் என்ற பெல்லின் ஓசையுடன் சிட்டாய் பறந்து செல்லும்....
.
.ப்ரௌன் கலர் காலருடன் சட்டை , ப்ரௌன் கலர் பேன்ட் போட்டு சும்மா சோலைக்கிளிகளாய் வேலைக்குச் செல்வோம்..
.
.
.பஞ்சு மில்லு வேலய பத்தி கொஞ்சமும் தெரியாத பிஞ்சு பக்கிக எங்களுக்கு வேலை சொல்லிக்குடுக்க ஒரு வாத்தியார வர வெச்சாக...அவரு இருமுனா நாங்க இருமுனோம்..தும்முனா , தும்முனோம்..ஏன்னா எங்களுக்கு மில் வேலய பத்தி ஒரு எளவுக் கூந்தலும் தெரியாது அதேன்...
.
.வாத்தியாருக்கு வடையென்ன..சம்சாவென்ன...குழிப்பணியாரமென்ன...சும்மா குமிச்சுப்பிடுவாய்ங்கே...அவரு தின்டு முடிக்க லொகருக்கு வாங்கு சொல்லிருவாவ....
.
.எல்லாம் வேலை பழகுற வரைக்கிம் தான்...பழவி முடிச்சவொடனே அமைதிப்படை அம்மாவாசை பாணியில் "என்ன மணி..என வாத்தியாரை விளித்தவுடன் "தக்காளி"... ஊட்டிக்கு தனியாத்தேன் போவனும் போல அப்டினு மணிவண்ணன் பாணில பல்பு வாங்கிட்டு பறந்து போய்ட்டார்....
.
.
.இந்த வெண்ணையையும் நம்பி ஒரு பொண்ணையும் கொடுக்க வைத்து அந்த விண்ணையும் தொட வைத்த மன்னான் மண்ணையும் மறக்க முடியுமா..???.
..
.
.ஒட்டுப்பீடிக்கு ஒண்ணார்வா இல்லாம கெடந்த எங்கள 1050 ஓவாயும் , பசீரு மாமு டீயும் வடையும் குடுத்து ஜீரோவா இருந்தவய்ங்கள ஹீரோவா மாத்துனது இந்த மன்னான் மில்தான்...
.
.
.ஏர்வாடி வசீர் மச்சாய்ங்...வந்த வொடனே வைண்டிங் மிசின் கிட்டக்க ஒரு யாசீன் ஓதிட்டுத்தேன் வேலைகள ஆரம்பிப்பாவ....
.
.ஒரு நட்டு திருடுன பையன "இன்னக்கி நட்டை திருடுனவய்ன் நாளக்கி ஸ்பின்னிங் ப்ரேமை திருடமாட்டான்னு என்ன நிச்சயம் அப்டின்ட்டு வேலய விட்டு தூக்கிட்டாக....பாவம்....
.
.அடுத்து ஒழுங்கா போய்க்கிட்டு இருந்த ஒத்த மாட்டு வண்டில அச்சாணி கழன்ட மாதிரி ரெண்டு சம்பவம்...ஒண்ணு தெக்கூட்டு புகாரி மச்சான் கார்டிங் மிசின்ல பிரஷ்ஷை விட்டுட்டு பிடில் வாசிச்சிட்டு இருந்தது...( நல்ல வேளை மச்சானுக்கு ஒண்ணும் ஆவலை ) ...ரெண்டாவது பவர் ஹவுசில் தீ விபத்து நடந்தது...அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் தீங்கில்லை....
.
.
தஞ்சாவூர் குலாம் பாயின் மிலிட்டரி யூனிபார்ம் தோரணை எங்களுக்கு சிரிப்பு செக்யூரிட்டியாகத் தெரிந்தது...டைம் ஆபீஸ் வஹாப் அண்ணனின் ஆப் நைட் , புல் நைட் டூட்டிகளில் கோழித்தூக்கம் காமெடியில் கலந்தது....
.
.
.எல்லாரையும் விட வைண்டிங் மிசினில் அடிக்கடி நூல் அறுந்து போவதை தவிர்க்க அம்ம பாலமுருகன் நூலை பைபாசில் விடும் ஜெர்மன் டெக்னாலஜியை கண்டுபிடித்து பின்னாளில் "பைபாஸ் பாலமுருகன் " என்று அன்போடு இன்றும் அழைக்கப்படுவதும், "ஓ.டீ பாக்க கூப்புடுறாய்ங்கடா..ஒடுங்கடா...ஓடுங்கடா....என்று ஷிப்டு முடிஞ்சவுடன் பின்னங்கால் பொடதில அடிக்க ஓடும் எங்கள் மத்தியில் சளைக்காமல் ஓ.டீ பார்த்து பின்னாளில் " ஓ.டீ சுல்தான் என்று தெம்போடு அழைக்கப்பட்ட மேஸ்திரியையும் மறக்க முடியாது....
.
.
.
.இப்படி தனிதனாக இருந்த என்னை மனிதனாக மாற்றி புனிதனாக மாறு என வாழ்த்தி விடைகொடுத்த மன்னானை ( இறைவன் ) நான் மறவேன்...
.
..
.நிறைய சொல்லலாம்...மக்களின் பொறுமையின் அருமை கருதி வெறுமையுடன் முடிக்கிறேன்..!!!
.
. ( மன்னான் நண்பர்கள் தங்கள் அனுபவங்களை கமெண்ட் பாக்சில் தொடருவார்கள் என்ற நம்பிக்கையில்....!!!!
முன்னாள் டைம் ஆபீஸ் சாகுல் ஹமீது ,
மன்னான் மில் , வீரசோழன் ரோடு , அபிராமம்..
.நீதி : வசந்த காலக் கோலங்கள் !!!
வானில் விழுந்த கோடுகள் !!!
கலைந்திடும் கனவுகள் !!!
கண்ணீர் சிந்தும் நினைவுகள் !!!

Google Search

Popular Posts

Blog Archive