Fellowship of Royal Society ( F R S )

சாமீ...எனக்கு ஒரு உண்மை
தெரிஞ்சாகனும் சாமீயோவ்...


கான்பகதூர் துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவுகளில் கான் பகதூர் பட்டத்திற்கு கட்டம் கட்டி ஆதாரம் காட்டியிருந்தேன்..ஆனால் F R S                 ( Fellowship of royal society ) அந்தஸ்து கிடைத்ததற்கு வெறும் லோகோவை மட்டும் பதிவிட்டிருந்தேன்.. அதை உத்து உத்து பாத்த ஒரு துப்பறியும் துலுக்கரு மச்சாய்ங் , சாமீ...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீயோவ்...அப்டின்னு இன்பாக்ஸ்ல வந்து நொட்டி உட்டுருச்சு பக்கிப் பயபுள்ள..( நாங்கல்லாம் யாரு ..பேட்டையிலேயே பிளேன் ஓட்டுவம்...பெரித்தா வீட்டுலயும் பிள்ளைகள கட்டுவம்..அம்மல்ட்டயேவா...)
அம்மளுக்கு ரோஷ கூந்தல் பொங்கிருச்சு...அப்புறம் அம்ம கூகுள் ஆண்டவரை கைல புடிச்சிக்கிட்டு தேத்தண்ணி இசுக்கோத்து பல்லுல கூட படாம தேடா தேடி அந்த ஆதாரத்தைக் கண்டு போட்டோமுங்கோ...
நாலு கொமரைக் கரையேத்துன சந்தோஷம் எனக்கு வந்திச்சுன்னா பாத்துக்குங்க..
ஆதாரம் : " ஏம்பேரு ஒமரு..எனக்கு நாலு கொமரு "


மே 17 ம் நாள் 1912 ஆம் ஆண்டு ஒரு மீட்டங்கி அதுல அம்ம சாதி சனத்துல பெறந்து சக்கப் போடு போட்ட துப்பாசு நன்னா கலந்துகொண்ட மீட்டங்கி அதை ஆதாரமாக கட்டம் கட்டி காட்டியிருக்கிறேன்.....


இந்த ஆதாரத்துடன் நீண்ட இடைவெளி ஒன்று விடலாம் என்று இருக்கிறேன்.
அபிராமத்தில் உள்ள நல்ல வகையறாக்களைப் பற்றிய விசயங்களைச் சேகரித்து "கிளப்பி . கிட்டங்கி , பங்கா மார்க்கா , சக்கரம் மார்க்கா இன்னும் எத்தனையோ ( விடுபட்டதை இன்பாக்ஸில் எழுதுங்கள்..) குடும்பங்களின் சுவராசியத்தை உள் வாங்கி பின் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அதற்கு கண்டிப்பா நீண்டதோர் இடைவெளி மிகவும் அவசியம்...தங்களிடம் உள்ள புகைப்பட ஆதாரங்கள் , கடிதங்கள் , டைரிகள் , ஏதும் இருந்தால் என்னிடம் கொடுக்கவும்..
விடைபெறுகிறேன்....விரைவில் வருவேன்..
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
அன்புடன்
அ.ப.சாகுல் ஹமீது.

The Great Dubash and Vijayan families...

" பாம்புன்னா புத்து இருக்கனும்
பருப்பு கடைய மத்து இருக்கனும்
தென்னை மரம்னா நெத்து இருக்கனும்
துபாஷ் விஜயன்னா கெத்து இருக்கனும் "



புளி விக்கிற , புண்ணாக்கு விக்கிற , புஸ்வாணம் விக்கிற பார்ட்டி கூட இப்ப விசிட்டிங் கார்டு வெச்சுக்கிட்டு லாவுச மாவுச அடிக்குதுக..


அப்ப அம்ம கெத்து பார்ட்டிக எப்புடி இருந்துருக்கனும்..விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தின் விசிட்டிங் கார்டு ( 1930 களில் ) ஒன்றை கண்ணுக்கு கண்ணாகச் சேமித்து வைத்து இங்கு வெளியிட்டுள்ளேன்.





இதில் குறிப்பிடப்பட்டுள்ள " காசீம் பிரதர்ஸ் " என்பது கான்பகதூர் துபாஷ் காதிறு சாஹிப் ஆரம்பித்த நிறுவனம்...காசீம் என்பது அவருடைய மகன் ஒருவரின் பெயர்.. இதில் தான் மானேஜிங் பங்காளியாக விஜயன் அம்பலம் இருந்தார்.
" விஜயன் அம்பலம் " என்ற பெயர்க் காரணம்....
இராமநாதபுரம் சேது மன்னரின் சேவையில் சிறந்து விளங்கிய அபிராமம் நூர்முஹம்மது என்பவருக்கு சேதுபதி மன்னர் சிறப்புகள் செய்து " விஜயன் அம்பலம் " என்ற விருதுப் பெயரையும் வழங்கினார்.( விஜயன் குடும்பங்களில் "நூர்,மீரா " என்ற பெயர்கள் நிறைய நபர்களுக்கு சூட்டப்பட்டு வருவதை இன்றும் நாம் காணலாம்). இந்நிகழ்ச்சி நடைபெற்று இருநூறு வருடங்களுக்கு மேலாகிறது.அவரது வழி வந்த வள்ளல் ( அப்துல் ரஹிமான் ) ஒருவரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரான சோதுகுடி அப்துல் காதிர் ராவுத்தர் அவர்கள் " விஜயன் அப்துல் ரஹ்மான் அகப்பொருட் பல்துறைக்கோவை " ஒன்றைப் பாடியுள்ளார்.



ஆதாரம் : வரலாற்று ஆய்வாளர் எஸ்.எம் கமால் அவர்கள் எழுதிய " முஸ்லீம்களும் தமிழகமும் " என்ற நூல்...( புகைப்பட ஆதாரம் இணைப்பில் )


1930 ஆம் வருடம் இரங்கூன் மாநகருக்கு இந்தியாவின் பின்னாளில் 3வது குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாஹீர் ஹுசேன் அவர்களும் , இஸ்லாத்துக்காகவும் , இந்தியாவுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த தியாகி மௌலானா முஹம்மது அலி ஜௌஹர் அவர்களும் விஜயம் செய்தபோது " சோலிய முஸ்லீம் சமூகத்தின் அன்றைய தலைவரான விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலமும் , சோலிய முஸ்லீம் சமூகத்தின் இளைஞர் அணிச் செயலாளரான அறிஞர் அல்லாமா மு.கரீம் கனி அவர்களும் சங்கத்தின் சார்பாக வரவேற்றனர்.
அடுத்த நாள் மாநாடு ஆரம்பிக்க இருக்கும் நிலையில் கௌரவ விருந்தினர்கள் இருவரும் ஏரிக்கரை ஒன்றின் ஓரத்தில் அமைந்த விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தின் அழகிய பங்களாவில் தங்கினர் அவர்களுக்கு பர்மிய , இந்திய உண்வு வகைகள் பரிமாறப்பட்டன..அந்த ஒரு நாள் சந்திப்பில் பல விடயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.


மேற்கண்ட நிகழ்வுகளை அறிஞர் அல்லாமா மு.கரீம் கனி அவர்கள் தான் எழுதிய " நான் கண்ட மாணிக்கம் " என்ற நூலில் குறிப்பிடுகிறார் ( புகைப்பட ஆதாரங்கள் பதிவில்.)
நீதி : " இருந்தாலும் இறந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும் "

Honorable Khan bahdhur Medal for Dubash Kader Sahib

வரலாறு என்பது படிப்பினை கொள்வதற்கும் , பெருமை கொள்வதற்கும் நம் முன்னோர்களால் எழுதப்பட்டு பின்னாளில் சந்ததியினர் அறிவதற்கும் , உணர்வதற்கும் , உதவும் கருவியாகும்.


அந்த வகையில் யாரும் ஆவணப்படுத்தாத , பதிவு செய்து வைக்காத நத்தத்து முண்டாசுக்காரரின் , மீசைக்காரரின் வரலாற்றை முக நூலில் பதிவு செய்து வருகிறேன்.. இதை பிடித்தால் முகநூலில் படிப்போம்..விருப்பமில்லை எனில் பக்கத்தைத் தள்ளிவிட்டுட்டு புள்ள குட்டிகள படிக்க வெக்கிற வேலைகள பாப்போம் . அதானே உலக வழக்கம்..
யாரு என்ன சொன்னாலும் துபாஷ் காதர் அவர்களின் , அவர் பிள்ளைகளின் , விஜயன் அப்துல் ரகிமான் அவர்களின் , அவர் பிள்ளைகளின் ராயல் லுக் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க...என்னைப் பொருத்தவரை அவர்களின் நுனி நாக்கு இங்கிலீசும் , ஸ்டைலான தோரணையும் பெரியவர்களிடம் கேட்டறிந்து புகைப்படங்களில் பார்த்து , புலகாங்கிதம் அடைந்து சேகரித்து வந்த பொக்கிஷங்கள் இவை.
நத்தத்து தலைப்பாக்கட்டி துபாஷ் ( இரு பாஷைகளில் பின்னிப் பெடலெடுப்பவர் ) அவர்களின் பேச்சில் மயங்கிய ஆங்கிலேயர்கள், அவருக்கு கான் பகதூர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.


கான் பகதூர் (Khan bahadur ') என்பது பிரித்தானிய இந்தியாவில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டமாகும். இசுலாமிய, பார்சி மக்களுக்கு கான் பகதூர் என்று வழங்கப்பட்டது. சிலநேரங்களில் ராய் சாகிப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.



இது வங்காளத்தில் ராவ் பகதூர் என வழங்கப்பட்டது. "ராவ்" என்ற சொல் "இளவரசர்" என்பதையும் "பகதூர்" என்பது "மாண்பிற்குரியவர்" என்றும் பொருள்படும். பிரித்தானிய இந்தியாவில் இந்துக்களுக்கும் கிருத்துவர்களுக்கும் பதக்கமொன்றுடன் வழங்கப்பட்ட இப்பட்டம் தற்கால பத்மஸ்ரீ போன்ற குடியியல் விருதுகளுக்கு இணையானது.


அது போக அவருக்கு லண்டன் ராயல் சொசைட்டி என்ற அமைப்பு ஆரம்பித்த ஆண்டு கி.பி 1663 முதல் இன்று வரை உலகத்தில் வெறும் 8000 தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கிய F R S ( Fellowship of the Royal Society ) என்ற பட்டத்தை 18 ஆம் நூற்றாண்டில் இந்த குக்கிராமத்து மனிதர் துபாஷ் காதிறு சாஹிப் அவர்கள் பெற்றது நமக்கு பெருமைதானே.. ( இந்த விருது பெற்றவர்களில் சர் ஐசக் நியூட்டன் மற்றும் மனோவியல் நிபுணர் ஸ்டீவ் ஹாக்கின்ஸ் குறிப்பிடத்தக்கவர்கள் )
இப்படி வியாபாரத்திலும் , பேச்சுத் திறமையிலும் புகழின் உச்சிக்குச் சென்றவர்களை பற்றி பேசி எழுதி பெருமை கொள்வோம் ( நூத்த பத்த செலவானாலும் பரால்ல..)
( இதுவே நிறைய வந்ததால் விஜயன் அம்பலமும் , டாக்டர் ஜாஹீர் ஹுசைன் அவர்களும் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்.... )
பின் குறிப்பு : ஒசம்பாத்து நன்னி இது பற்றி...... " அடேய்...ஆனா பானா பேரப்புள்ளை...அம்ம துப்பாசு நன்னாவயும் , வெசயன் நன்னாவயும் பத்தி சுழிய அடக்கி குத்த வெச்சு , பேச்சு புக்குல எழுதுடா,,, அத பாத்து பரிவிச்சு சூதானமா அம்ம பய புள்ளைக கேக்கட்டும்..

A.P.Mohamed Shareef and family

ஆனா பானா அரைக்கஞ்சம்!!
மூனா பானா முழுக்கஞ்சம்!!
பெரிய ஊட்டு பிரியாணி அம்புட்டையும் பந்தில வெக்கிறீக..அம்ம ஊட்டு கட்டுச் சோத்தை அவுக்க மாட்டீங்குறியளே மாமூன்டு என் மச்சாய்ன் சுபுகானி மயன் இன்பாக்ஸ்ல வந்து கேட்டாப்புள ( ஊர்க்காட்டு பக்கம் வந்தா அம்மளுக்கு ஒரு கோடாலி சாப்பும் , பச்சைத் தைலமும் கெடைக்கும்ல ) சரி போட்டு உட்டுட்டு போவம்னு இந்த பதிவை போடுறேன்...


வியாபாரத்தில் நாணயம் எப்படி முக்கியமோ அதுபோல் நா நயம் ( பேச்சுத் திறன் ) ரொம்ப முக்கியம்..தங்கம் பொன்னு யாவாரத்தில் தன் மின்னும் தங்க பற்களால் சிரித்துப் பேசியே சுத்துப்பட்டு ஊர்களையும் வளைத்துப் போட்ட அ.ப.ச ( அ.ப.சரிபு ) அவர்கள் பொ.ப.ச வாக ( பின் குறிப்பில் சொல்லப்படும் ) மாறி பல சாதனைகள் புரிந்துள்ளார்.


நாலு கடைக்கி போங்க அப்புறம் அம்ம கடைக்கி வாங்க...அப்டின்டு லலிதா ஜுவல்லர்ஸ் ஓனர் அய்யா இவுக வித்தியாசமா விளம்பரம் பண்ணது மாறி அப்பவே அ.ப.ச ( அ.ப.சரிபு ) என்ற பொ.ப.ச ( பின் குறிப்பில் சொல்லுவம் ) விளம்பரம் பண்ணிருக்காப்ள..அதை இப்பதிவின் படங்களில் பாருங்கள்... வியாபாரத்தில் சைக்காலஜி எப்புடி ஒர்க் அவுட் ஆகுதுன்னு புரியும்...
பின் குறிப்பு : பொ.ப.ச என்றால் "பொண்டாட்டிக்கு பயந்தோர் சங்கம் " எங்களுக்கு ஊரு பூறா கெளைதேன்...
எல்லாம் செரி!! ஆனா பானா அரைக்கஞ்சம்!! மூனா பானா முழுக்கஞ்சம்!! இதுக்கு வெளக்கம் சொல்டியோவ் அப்டீன்னு ஒரு மைன்ட் வாய்ஸ் ஒண்ணு கிளியரா கேக்குது!!
அதாகப்பட்டது கஞ்சம் என்றால் தாமரை . தாமரையின் குணாதிசயங்களில் ஒன்று குளிர்ச்சியூட்டுவது , மற்றொன்று சாந்தப்படுத்துவது இதைக் கருத்தில் கொண்டு நாம் இந்த பழமொழியை ஆராய்வோமெனில் ஆனா பானா அரைக்கஞ்சம் என்றால் உங்கள் மனதில் உள்ள சுமைகளை இறக்கி , கூல் பண்ணி , சாந்தப்படுத்திய தாமரையாக உங்களை அரை மனதோடு அனுப்புவார் ஆனா பானா !!
என்பதே இதற்கு தெள்ளியதோர் உதாரணமாம்!! இதே விதியை மூனா பானா அவர்களுக்கு அப்ளை பண்ணி அறியவும்!!
ஆதாரம் : கஞ்சம் என்பதை தமிழ் அகராதியைப்பார்த்தறிந்த நிழற்படம் பிற்சேர்க்கையில்..


நன்றியுடன் !!!!
அரைக்கஞ்சத்தின் அன்புப்பேரன்!!!
அ.ப.சா ( அறவே பயப்படாத சாகுல் )

Sons of Dubash kader sahib

( தொடர்ச்சி ) ...


நண்பர் ஒருவர் துபாஷ் காதிறு சாஹிப் பற்றி எழுதி விட்டீர்கள்..அவரது பிள்ளைகளைப் பற்றி எழுதுங்களேன் என்றார். ( நத்ததுக்கே உரித்தான உசுப்பு ஏத்தல் )
துப்பாஷிய வரலாற்றில் நான் கண்டு வியந்த ஒன்று எது என்றால் துப்பாஷ் காதிறு சாஹிப் தன் ஆண் மக்களுக்கு வைத்த பெயர்களின் ஒலிப்பு முறைகள்..( கருவாப் பய புள்ள ஒக்காந்து யோசிச்சிருக்குமோ..!!! ) 1, காசீம் , யாசீன் , 2, அஹம்மது இபுறாகீம் , முஹம்மது இபுறாகீம் , செய்யது இபுறாகீம் , 3 , எஹியா , ஜக்கரியா , ஈசா ..... ஆஹா என்ன அழகான ரைமிங் பெயர்கள்.
துபாஷ் காதிறு சாஹிப்பின் பன் முகத்தன்மைகளை ஒவ்வொரு வாரிசிலும் ஒவ்வொன்றைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள் நத்தம் அபிராமம் மக்கள்.
ஒரு வாரிசுகள் ஆன்மீகத்தையும் , அகமியத்தையும் , அலசி ஆராய்ந்து அனுபவித்து ருசித்து வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் நிர்வாகத் திறைமையை வெளிப்படுத்தி நிலச்சுவான்தார்களாகவும் , ஜமீன்தார்களாகவும் நம் மண்ணிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் சமையல் சுவையை உப்பு , புளி , மிளகாய் என ரசித்து , ருசித்து சமைத்து வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் கலையையும் , இலக்கியத்தையும் கரைத்துக் குடித்து கவி வானில் கானம் பாடி வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் தைரியத்தை மிடுக்காய் உடுப்பாய் அணிந்து காவல் துறை உயர் பதவிகளில் பணியாற்றி கௌரவித்திருக்கிறார்கள்.
அத்தனையையும் அகிலத்திற்கு காண்பித்து மறைந்த காதிறு சாஹிப் ஒரு சகாப்தமே !!!!
பின் குறிப்பு : நானும் துபாஷ் காதிறு சாஹிப் மாதிரி தலைப்பாகை கட்டலாம்னு இருக்குறதுலேயே நல்ல துண்டை எடுத்து தலைப்பா கட்டி பார்த்தேன்... ஆனா பானா என்ன முள்ளு கட்டு தூக்க போறியான்டு கேக்குது ஒசம்பாத்து நன்னி ( என்னா கிசும்பு கெய்விக்கி )

vijayan abdul rahiman ambalam , vijayan mohamed meera ambalam , chank wappa

( தொடர்ச்சி ) ....


மார்க்கக் கல்விக்கு துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் வித்திட்டதும் , உலகக் கல்விக்கு அவரது மருமகன் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் வித்திட்டதும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத வரலாறு...


அது போல் முஸ்லிம் செகன்டரி ஸ்கூல் கட்டிடம் உருவாக அனைவருக்கும் இலவசக் கல்வி கண் திறக்க தன் உறக்கத்தையும் மறந்து 7 வருடம் உழைத்தாரே விஜயன் முகம்மது மீரா அம்பலம் அவர்கள்... அவரும் ...


அதுபோல் பர்மா அடைப்பின் எதிரொலியாக திக்கற்ற நிலைக்கு பள்ளி நிர்வாகம் தள்ளப்பட்ட போது தாயன்புடன் தானே முன் வந்து ஆசிரியர்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைக் கொட்டிக் கொடுத்தாரே சங்கு வாப்பா அவர்கள்.. இவரும் ...


எந்த மாணவர்களிடமும் எந்த நன்கொடையும் வாங்காமல் இப்போது பள்ளியின் கிழக்கிலும் மேற்கிலும் உறங்கிகொண்டே நன்மை எனும் நன்கொடையை மறுமை வரை பெற்றுக்கொண்டிருக்கிறார்களே..இவர்களின் வரலாறுகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை...
பின் குறிப்பு : நான் 2013 ல் தரைக்குடியில் பணியாற்றும் போது ஒரு வயதான பாட்டி " யோவ்..வாத்தியார் சாரு...மின்ன நாங்க ஒங்க ஊரு உசுக்கோல்ல படிக்கம்போது கைலி கட மொல்லாளிய சாத்துக்குடி குடுத்தாக...லட்டு குடுத்தாக...இப்ப என்னடான்னா ஆறாப்புக்கு இம்புட்டு ஒம்பதாப்புக்கு அம்புட்டுன்டு துட்டு கேக்குறாக...ஏன் காசு பணம் மொடையாயிருச்சோ..." அப்டின்னு கேட்டுச்சு..அதுக்கு அந்த பாட்டி என்னய பிஞ்ச செருப்பெடுத்து செல்லைலயே சாத்திருக்கலாம்..
நீதி : கல்விக்கு உயிர் கொடுத்தோர் காசினியில் சாவதில்லை.

vijayan abdul rahiman ambalam

முகநூல் நட்பு வட்டங்களே ( சதுரம் , செவ்வகம் , முக்கோணம் இத்தியாதி...இத்தியாதிகளே )


நீண்ட நாளுக்குப்பின் நிறைய நேரம் கிடைத்து எழுதலாம் என்று நினைத்து ரமலானில் வேண்டாம் என்று மறுத்து ஏனென்றால் நாம் ஒன்று எழுத அது ஒரு பித்னா இண்டியா லிமிட்டெட்டில் முடிந்து கண்ணிய மாதத்தை மாசு படுத்த வேண்டாம் எனப் பொறுத்து தற்போது எழுத ஆரம்பிக்கிறேன்..
ஏற்கனவே நம் நத்தம் நகர் மாந்தர்களின் சித்தம் எல்லாம் நிறைந்திருக்கும் தூயவர் ,உழைப்பால் உயர்ந்த உத்தமர் " துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் பற்றி வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறேன்..இதை ஆசிரிய நண்பர் ஜாஹீர் உசேன் அவர்கள் எம்.பில் பட்டத்திற்கு ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

தற்போது நத்தம் அபிராமம் மக்களின் கல்விக் கனவுக்கு வித்திட்ட விஜயன் எனும் வீரப் பரம்பரையில் விளைந்த புதுச்சுடர் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் அவர்களைப் பற்றி எழுத விழைகிறேன்...


இவர் துபாஷ் அப்துல் காதிறு சாஹிப்பின் மருமகனார் ஆவார்.. மாமனும் மருமகனும் பர்மாவில் தொழில் துறையில் கோலோச்சி இமயத்தைத் தொட்ட வரலாறு நாம் மறுக்க இயலாத வரலாற்றுக் காவியங்கள்..


விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் எனும் மீசைக்காரர் அன்று நமதூரில் கல்வி விதை விதைக்காதிருந்தால் இன்று " தோசையம்மா தோசை " என்று பாடம் நடத்திக்கொண்டிருக்கும் நான் ஒரு காட்டரபியிடம் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு ஒட்டகப்பால் டீ குடித்துக்கொண்டிருப்பேன்..


இன்று தமிழக முஸ்லீம்கள் சீதக்காதி வள்ளல் , பி.எஸ் அப்துல் ரஹ்மான் பெருந்தகை ஆகியோரைப் போற்றுவது போல் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தை இன்றளவும் மரியாதையுடன் போற்றி வருகிறார்கள் பர்மிய மக்கள்..அந்த அளவுக்கு நத்தம் அபிராமத்திற்கும் , ரெங்கூன் மக்களுக்கும் கல்வியால் , கொடைத்திறத்தால் வாரி வழங்கி விண்ணின் நட்சத்திரங்கள் நாணும் அளவுக்கு ஜொலித்தார் அந்த மீசைக்கார அன்பர்..





( தொடரும் ....)

Google Search