நன்னியே !! என் அன்னையே !!!

 நன்னியே !! என் அன்னையே !!!




பெத்தாவே !! என்னப் பெத்தாரே !!!
அத்தம்மா !! நீ என் சொத்தும்மா !!!
ஒத்தைப் பிறை நிலவாய் சீனிப்
பத்தை கைலியுடன் அபிரை
நத்தம் வீடுகளில் நாணி
நடைபயின்ற நன்னியே ! என் அன்னையே !
உப்பூரணி ஊதக் காற்றில்
உரசி வரும் வாசம் என்ன ?
நன்னியே ! என் அன்னையே !
ஓ ! நீ ஒழப்பி வைத்த
நாஷ்டாவின் வாசனைதான்
நாசிக் கமலமெங்கும்
பூசிச் செல்கிறதோ !
நன்னியே ! என் அன்னையே !
கடல் கிழித்துக் கதிரவன் தான்
உதிக்கும் முன்னாலே தன்
உடல் குளித்து ஒதுவெடுத்து என
அனிவா பெரித்தா கவுசா கத்தினாலும்
கடல் குளித்து காயப்போட்ட
கலரு துண்டு காய்ஞ்சு அந்த
கதிரவன் ஒசக்க வரும் நேரம் நான்
ஒத்தக் கண்ணத் தெறந்து பாக்க நீ
உச்சி உச்சி நேரம் ஒறக்கத்தப் பாரு
கச்சல்ல போய்ருவான்னு
குறுக்குல மிதிச்சு பொசுக்குன்டு
எழுப்புவாயே ! இப்போதும்
அந்த ஞாபகம் தான்
நன்னியே ! என் அன்னையே !
நீ ஆக்கி வெச்ச பிதுக்கு பயத்தாணத்த
எதுக்களிக்காம தின்றுவிட்டு
பாக்கி வைச்ச பசி வயிறுக்கு
பாக்கு வெத்தல மென்னுக்கிட்டு
பள்ளியாசல் மண்டபத்தில்
வியாக்கியானம் பேசி வந்த என்னை
சொணங்காமல் பார்த்து வந்தாயே
சொர்ணமே ! என் வர்ணமே !
கூட்டு தையல் கடையில் அம்பி டெய்லர்
நம்பித் தைத்த அரைக்கைச் சட்டையை
சங்கு கிப்புசு சாரக்கைலியை
கஞ்சி மடிப்பு கலையாமல் உடுத்தி
உற்றார் உறவினருடன்
வற்றா மகிழ்வுடன்
பெருநாள் தொழுதுவிட்டு
மூச்சு முட்ட சர்பத்தை
மூசு மூசுன்னு குடித்துவிட்டு
பேச்சு மூச்சு இல்லாமல்
வீடு வந்த எனக்கு
குறும்பாட்டுக் கறிச்சால்னாவும்
தரம் பார்த்து பரட்டாவும்
கரும்பாக ஊட்டினாயே
நன்னியே ! என் அன்னையே !
வகுத்தல் கணக்கு சொன்ன
வாத்தியார ஏச்சுப்புட்டு
வவுத்த வலிக்குதுன்னு
ஒரு வழியாச் சாச்சுப்புட்டு
படுத்த படுக்கையாய் பாசாங்கு
செய்த எனக்கு கொழுத்த
கொடல் கொழம்பு
கொட்டிக் கொட்டி ஊட்டினாயே
கோதையே ! என் ராதேயே !
கிட்டி பம்பரம் என கிரிக்கெட்டு
வெளாடி விட்டு தறிகெட்டு போயி நல்ல
ஊரு பலாய எல்லாம் உள் பாக்கெட்டில்
வாங்கிவிட்டு ஊடு வந்து சேர்ந்தவுடன்
ஒரு சாக்கு குத்தம் குறை ஈசாக்கு மாமு சொல்ல
அவரை நாசூக்கா அனுப்பிவிட்டு என்
நடு முதுகில் போஷாக்கு ஊட்டினாயே
நன்னியே ! என் அன்னையே !
உன்னைப்போல் நன்னி பெத்தா
நன் மடியில் வளர்ந்த சுகம்
இன்னும் சில காலம் இருந்திருக்க
வேண்டுமென கண்ணீர் கம்பலையாய்
எண்ணக்கவி மூலம் எடுத்துரைப்பேன்
என்றும் நான் !!
நன்னியே ! என் அன்னையே !
இவண்
ஓரவிழிகளில் ஓடும் நீருடன்
ஒசம்பாத்து பேரன்...

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive