மாறியது நத்தம் மாறாதது கௌரவம்!!!
நத்தத்து ஆண்மக்கள் அனைவரின்
உடலிலும் பர்மா கோட்டு! பர்மா கைலி!
வீசைக்கணக்கில் கிடைத்த கறி மீனில்
வித விதமாய் உணவுவகைகள்!
நெஞ்செலும்பு சூப்பு வைத்து
நித்தம் நித்தம் இடியாப்பம்!
பஞ்சு பரட்டா குஞ்சு கோழி
பசியார பதமாய் வரும்!
ஆசைக்கிழத்திக்கு அறுபது பவுனில்
அழகிய ஒட்டியாணம்!
பர்மாவில் ஆறு மாசம்!
பாச ஊரில் ஆறு மாசம்!
இவ்விரு ஊர் மனைவிகளுக்கும்
எப்போதும் ஆறு மாசம்!
பர்மா சுருட்டு ஊதிக்கொண்டே
கிராம போன் இசைத்தட்டில்
இந்திப் பாட்டு இசை முழக்கம்!
பர்மா அடைக்கப்பட்டது!
பணங்கள் முடக்கப்பட்டது!
கோட்டை கொத்தளங்களில்
கோடியில் புரண்ட மக்கள்
கோடித்துணியின்றி ஓடி
வருகிறார் உற்ற ஊரை நாடி!
வெள்ளிப்பாத்திரங்களும்
பர்மா தேக்குகளும்
கொல்லைப்புரத்து வழியாக
புதுப் பணக்காரர்களின்
வீடு தேடிப் போனதால்
கௌரவமாய் கழிந்தது
கடந்த காலம்!
இன்று சொந்த கிராமங்களை
சொற்ப விலைக்கு விற்று
சோகமாய் போகிறது சொச்ச காலம்!
சவுதி சிங்கப்பூரில் வேலை இருந்தும்
மவுனம் காக்கிறது மானம் ரோசம்!
இன்றும் என்றும் பர்மா பழைய கைலியை
பரிவாய் வருடிக்கொண்டே பாதி நாட்களில்
பயணம் மேற்கொண்டு முடிவை நோக்கி
நொடிகளை எண்ணுகிறது பாழாய்ப்
போன கௌரவ நெஞ்சம்!
மாறியது நத்தம் மாறாதது கௌரவம்!!!
****************************************************
பர்மா அடைக்கப்பட்டபோது எழுதப்பட்ட
கல்கியின் கதையைப் படிக்க

இங்கே சொடுக்கவும்!!

கவிதையே தெரியுமா?

அது வேறு இது வேறு!!!!
அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய்
திரிப்பேன் என்றேன்! இன்று மனைவியான பின்
தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்! கேட்டும்
கேளாதவனாய் சென்று விட்டேன்!
அன்று நட்சத்திரத்தை ஆபரணமாகச்
செய்து அலங்கரிப்பேன் என்றேன்! இன்று
முக்கால் ரூபாய்க்கு ரிப்பன் கேட்டாள்! உன்
அப்பன் வீட்டுக் காசில் வாங்கு என்றேன்!
ஏன் இந்த மாற்றம்??!!!

வாயா இல்லை! அன்பைச் சொல்ல!
இரு வருடங்கள் விழிகளில் மட்டும் காதலித்தோம்!
இன்று மொழிகளில் காதலிக்க முடிவெடுத்து என் காதலை
வெளிப்படுத்த வாய் திறந்தேன்! அதே நேரத்தில் அவளும்
ஏதோ சொல்ல முனைந்தாள்! பெண்ணுக்கே முதல் வாய்ப்பென
அவளைப் பேச வழி விட்டேன்! நான், இறந்து விட்ட அவள் அண்ணனை
அப்படியே உறித்து வைத்தவன் போல் இருக்கிறேன் என்ற விழி நனைய வைக்கும்
செய்தியை எளிமையாய் சொன்னாள்!
தவறு அவள் மேல் அல்ல!
பாசப் பார்வையை காதல் பார்வையாய்
இரு வருடங்களும் எண்ணிய என் மேல்தான் தவறு!
ஓ! காதலரே!! இனி கண்களால் மட்டும் காதலிக்காதீர்!
உங்களுக்கு வாயா இல்லை! அன்பைச் சொல்ல!

கவர்ச்சிதான் வாழ்க்கை
பள்ளிப் பருவத்தில் இனக் கவர்ச்சி!
கல்லூரிப் பருவத்தில் மனக் கவர்ச்சி!
தந்தைப் பருவத்தில் பணக் கவர்ச்சி!
கிழப் பருவத்தில் பிணிக் கவர்ச்சி!
செத்து மடிந்ததும் புழுக் கவர்ச்சி!

முதிர் கன்னி!
மற்ற பெண்கள் தண்ணீரில் குளிக்க
இவள் மட்டும் கண்ணீரில் குளிக்கிறாள்!
கனவுகளில் மட்டும் குடித்தனம் நடத்தி
பேரன் பேத்தி எடுத்தவள் இவள்!
இன்று அவள் பேத்திக்கு வளைகாப்பு!
நிஜங்களில் அவள் வாழ இராமன்கள்
கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!
இராவணன்களாவது முன்வரட்டும்!
இல்லையேல் கனவிலேயே விதவையாகிவிடுவாள்!!

ரோஜாப் பெண்!
வாசத்தை வைத்து ரோஜாவையும்
நேசத்தை வைத்து பெண்ணையும்
நம்பிவிடாதே!ரோஜா மறுநாளும்
பெண் மறுவாரமும் வா(ட்)டி விடுவர்!

பாசி படிந்த உலகமடா!
மானே என்றேன் மயங்கவில்லை!
கனியே என்றேன் கனியவில்லை!
இசையே என்றேன் இசையவில்லை!
மலரே என்றேன் மசியவில்லை!
அழகே என்றேன் அமையவில்லை!
பொன்னே என்றேன் பொருந்தவில்லை!
அன்று ஓசி காரில்வந்தேன் பேசிவிட்டாள்!
கார் ஓசி என்றேன் ஏசிவிட்டாள்!
பாசி படிந்த உலகமடா!என வியந்தேன்!
பார்த்து போகாவிட்டால் பாதாளந்தான்!

மரணமே!நீ மறுநாள் வா!
தென்றலே நீ கொஞ்சம் ஓய்வெடு!
அதோ!என்னவள் மண்ணலந்து நடக்கிறாள்!
நிலவே!நீ ஒளிந்து கொள்!
அதோ!என் கண்ணவள் களிநடை பயில்கிறாள்!
குயிலே! நீ வெட்கப்படு!
அதோ!என் சின்னவள் சிரிக்கிறாள்!
அமுதமே!என் வாய்க்குள் போகாதே!
அதோ! என் பொன்னவள் எச்சில் உமிழ்கிறாள்!
மரணமே!நீ மறுநாள் வா!
அதோ!என் முன்னவள் என்னிடம் வருகிறாள்!

அந்தக் கல்நெஞ்சக்காரி
போலியோ சொட்டு மருந்து போட ஊரே ஓடியது! இச்செய்தி
அந்தக் கல்நெஞ்சக்காரி காதில் விழுந்தும் கண்டுகொள்ளவில்லை!
அவளது மூன்று வயது முடமான மூத்த மகன் அடம்பிடித்து அழுகிறான்
தானும் போவேன் என்று! அந்த தாய் இடுப்பில் தனது இரண்டாவது
ஊனக்குழந்தையை இடுக்கிக் கொண்டு படீரென கதவைச் சாத்துகிறாள்!
பதில் சொல்ல வேண்டும் இவள் கல்நெஞ்க்காரியா? என்று!

பாலாபிஷேகம் !!!
தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து விட்டு
பத்தடி கூட நடக்கவில்லை அந்த ரசிகன்!
பறந்து வருகிறது ஒரு தகவல்!
பால்குடி மறவா பாலகன் மகனைப் பசிப்பிணியால்
மரணம் குடித்து விட்டது என்று!
நாளை தலைவருக்கு நெய் அபிஷேகம்!!!!!!!

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

Tamilnadu Results