பிச்சுப் போட்ட பொரட்டாவும் கொதிக்க கொதிக்க சால்னாவும் !!!

 பிச்சுப் போட்ட பொரட்டாவும் கொதிக்க கொதிக்க சால்னாவும் !!!

இது ஒரு நீண்ண்ண்ட பதிவு ( என்னய ஒங்க தாயா புள்ளயா நெனச்சு மன்னிச்சுக்கோங்கோ!! )



79 - 80 களில் ஆறாப்பு படிக்கும் போது எங்க அத்தா வாலண்டியரா ஒரு கால் சைக்கிள் ( அரைவண்டிக்கும் சிறியது ) வாங்கிக் கொடுத்தாக..பரால்லயே அப்டின்டு நல்லா பழவுனேன்...கடேசில அது ..அதேன் அந்த சைக்கிள்தேன் எதுக்கு வாங்குனாருன்னா உப்பூரணி கரையில் உள்ள மம்மசா கடையில் பொரட்டா வாங்கவும் , பேட்டையிலே கறி மீன் வாங்கவும் , வேலுச்சாமி சாரு ஐஸ் பேக்டரில நோம்புக்கு ஐஸ் வாங்கவும் ஊட மாட ஒதவுன்னுங்குற ஒரே காரணத்துக்குத்தேன்...அப்டிங்குறது தெரிஞ்சவொடனே ரெம்ப பெருமைப்பட்டேன்...
காலைல எந்திரிச்சு பல்லு வெலக்குறேனோ இல்லையோ பத்து ஓவாயக் குடுத்து பரட்டா வாங்க அனுப்பிருவாவ எங்க அத்தா இவுக... உப்பூரணி எதுக்க ஒரு கூரை கடையில் ஒசப்பா பொரட்டாவ வீசிக்கிட்டே " வாங்கன்னு ஆனா பானா..நொப்பன் எத்துன பொரட்டா கேட்டாய்ன் "அப்டின்னு ஒரு இழுவையப் போடுவாக. அதுக்கு.நான் " அஞ்சுதேன் ஒசாப்பா அப்டின்டு சொன்னவொடனே சுடச்சுட வாழை எலையில பொரட்டாவ கெட்டி கொதிக்க கொதிக்க சால்னாவ சிலுவர் டேப்புல ஊத்திக்குடுத்து பாத்துப் போப்பேன் என்பார் பரிவாக...!!
அதை வாங்கிகொண்டு பஞ்சாப் பறந்து வந்து அத்தா சாப்புடுற எடத்துல வெச்சிட்டு எதுத்த திண்ணையில இருந்து எட்டிப் பாப்பேன்...அவுக 3 1/2 பரட்டாவ தின்டுட்டு எலையோட மிச்சப் பரட்டாவயும் இம்புட்டு சால்னாவையும் ஓரங்கட்டி வெச்சிருவாக..எனக்கு அம்புட்டு குஷி...எலையோட வாசத்தோட ஒரே மூச்சுல சாப்புட்டு முடிச்சிட்டு காலை ச்சாப்பாட்டுக்கு அடுப்பாங்கரைக்கு போய்ருவேன் ( பசிக்கும்ல ...)



அடுத்து 7,8 படிக்கும்போது ஆனா பானா அலுமாசல்ல ஆட்டய போட்ட அஞ்சு ருவ்வாயும் , ஈஸ்கனியப்பா ரைஸ் மில்ல உஸ்க்கா போட்ட சில பல சில்ர காசுகளையும் எடுத்துக்கிட்டு அபிராமம் பஸ் ஸ்டாண்டுல கம்மாக்கரையில உள்ள "எவரெஸ்ட் புரோட்டா ஸ்டால் " (இப்ப உள்ள அய்யா தேவர் சிலைக்கு பக்கத்துல) போய்ருவம்.. மஜீதோ , மஜீது தம்பியோன்னு ஞாபகமில்ல...பொரட்டாவ அப்டி பிச்சுப் போட்டுட்டு , சுடச்சுட சால்னாவ ஊத்துவாவ பாருங்க இப்பவும் அந்த சால்னா வாசம் நினைவுக்கு வருகிறது..
கொய்யாலே.. பொரட்டாவ நாக்குத் தட்டிட்டு " மகமாயி தேட்டருக்கு உள்ளே போயி ( வெரச போனாத்தேன் பெரிய ஒட்டுப்பீடி கெடைக்கிம் ) மீசிங் போடுறதுக்குள்ள மண்ணக் குமிச்சு ஒக்காந்து ஒட்டுப் பீடிய குடிக்கிற சொகம் இப்ப 555 சிகிரெட் குடிச்சாக் கூட கெடைக்க மாட்டிக்குது ஏய்ய்ன்ன்ன்ன்ன்.....!!!
அம்மூருல ஒவ்வொரு பொரட்டாவுக்கும் , ஒவ்வொரு சால்னாவுக்கும் ஒரு டேஸ்ட்...ஒண்ணுக்கு போட்டியா ஒண்ணு வராது..தனித் தனி ட்ராக்.. அம்ம காசாண்ணே பிராட்டா ஒரு டேஸ்ட்டுன்னா அம்ம முத்தலிவு மாமு பொரட்டா ஒரு டேஸ்ட்டு...முன்னே கூறிய ஒசப்பா டேஸ்ட் ஒரு ரகம்... ஈருபத்தி செய்யது மாமு டேஸ்ட் வேறு ரகம்..( எம்சியாரு , சிவாசி , அசினிகாந்தம் , கமலகாசம் படம் மாறின்டு வெச்சுக்கிருவம் ) இப்ப நம்ம கஞ்சி செய்யதண்ணேய்ன் , மற்றும் நம் ஒறவினர் சர்தார் அண்ணன் ,MSM சாகுல் அண்ணன் கடை, மதனா மச்சாய்ங். வைத்தீ., ஏ ஒன் பிராட்டாக்கள் தனி ரகம்..( விடுபட்டதை கமெண்டுல எழுவுங்க..... )
நான் எளையாங்குடில காலேசு படிக்கம் போது வாட்சாஹோட்டல் ,இபுறாகீம் ஓட்டல் பரட்டா ,சால்னாவையும், , கம்மாக்கரை தாண்டி இருந்த மம்மி ஓட்டல் ( மாடியில்தான் என் ரூம்மு) பரட்டாவயும் எப்படி கையாண்டேன் என்பதை நண்பர்கள் மன்சூர்,சகுபர் ,மன்சூர் அண்ணன்கள், மற்றும் என் மச்சான் ஹாருனையும் கேட்டால் தெரியும்..
அம்மூரு பொரட்டா மதுராசு , சவுதி , சிங்கப்பூரு , மலேசியா போன்ற ஊர்களுக்கும் போன , போய்க்கொண்டிருக்கும் , போவப்போகும் சரித்திரம் ஊரறியும் என்பதில் ஐயமில்லை.
தொந்தி டீ.விக்காக..ஒளிப்பதிவாளர் ஒசய்ங்கனியுடன் உம்மாங்கனி மயன்..நன்றி..!!
பின் குறிப்பு : ஆனா பானா அலுமாசல் ஆட்டை மற்றும் மிசின் கல்லாவில் சில்ரை உஸ்க்கா போட்ட வழக்க்கில் குட்டி மாமுவுக்கும் , சாவுலுக்கும் அடுத்த நாள் முதுகில் பூரியாம் பாத்தியா ஓதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
மாவு மிச்சம் கிச்சம் இருந்தா அடுத்து ஒரு தொடர்ச்சிய போஸ்ட்டா போடுவம்,,,

அகக் கண்ணால் அபிராமம் வலம் வந்த அமீர் அண்ணன் !!!!

 அகக் கண்ணால் அபிராமம் வலம் வந்த அமீர் அண்ணன் !!!!




" பேட்டையில மீனு வந்துருக்கு...வாங்குறவுக வாங்கிங்கங்க !!! சீலா மீனு நகரை மீனு , பாறை மீனு வாளை மீனு இப்புடி பல ரகத்துல மீனு கொட்டிக் கெடக்கு பேட்டையில... வாங்குறவுக வாங்கிக்கங்க...!!!!
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அபிராமம் வீதிகளில் அஸர் நேரங்களில் இந்த கருப்பு நிலா வலம் வரும். புறக்கண்கள் புலனறியாவிட்டாலும் தன் அகக் கண்களால் கடல் மீன்கள் வருகை பற்றி நமக்கெல்லாம் வழி காட்டிய அமீர் அண்ணன்..
மஞ்சப் பையையும் , காக்கிப் பையையும் சைக்கிள் பின் சீட்டில் சின்னதா மடித்து கிளிப்பில் சொருகிக்கொண்டு சுத்துப்பட்டு கிராம சாதி சனங்க பேட்டை நோக்கி பெடலை மிதித்து பெருமையுடன் நாடி வந்து விரும்பிய மீன்களை அள்ளிச்செல்லும்..



மகரிப் நேரங்களில் அபிராமம் நத்தம் ஊடுகளில் பொறைத்தாவணி பெத்தாக்களின் அம்மி ஓசை அம்புட்டு ரோடுகளிலும் இனிய நாதமாகக் கேட்கும்.. தக்காளிப் புளிப்பில் கொழப்புனாப்புள மீனாணம் காச்சி சுடச்சுட சோத்தை ஆக்கி , உப்பு ஒரைப்போட நடுத் துண்டு மீனுகள பொரிச்சு வச்சிருவாக...நம்ம பெருசுகள்ல இருந்து எளசுக வெரைக்கிம் நொட்டாங்கைய கைய தரையில ஊண்டிக்கிட்டு சோத்தாங்கையால சல்லம் சல்லமா சாப்புட்டுட்டு ஏப்பம் விட்ட நாட்கள் இன்றும் நினைவுக்கு வருகின்றன...!!!!
நீதி : கறி , மீனுகள வள்ளு வதக்குன்டு தின்டுட்டு , கல்லுக்கெனக்கட்டா ஒடம்பை வச்சாத்தேன் கட்ட கடேசி காலத்துல தெடகாத்தரமா நோவு நொடியில்லாம ஓதித் தொழுது நோம்பு வெச்சு ஈமாங்கலிமாவோட ஒசக்க அல்லாட்ட போவலாம்..!!!

Fellowship of Royal Society ( F R S )

சாமீ...எனக்கு ஒரு உண்மை
தெரிஞ்சாகனும் சாமீயோவ்...


கான்பகதூர் துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவுகளில் கான் பகதூர் பட்டத்திற்கு கட்டம் கட்டி ஆதாரம் காட்டியிருந்தேன்..ஆனால் F R S                 ( Fellowship of royal society ) அந்தஸ்து கிடைத்ததற்கு வெறும் லோகோவை மட்டும் பதிவிட்டிருந்தேன்.. அதை உத்து உத்து பாத்த ஒரு துப்பறியும் துலுக்கரு மச்சாய்ங் , சாமீ...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீயோவ்...அப்டின்னு இன்பாக்ஸ்ல வந்து நொட்டி உட்டுருச்சு பக்கிப் பயபுள்ள..( நாங்கல்லாம் யாரு ..பேட்டையிலேயே பிளேன் ஓட்டுவம்...பெரித்தா வீட்டுலயும் பிள்ளைகள கட்டுவம்..அம்மல்ட்டயேவா...)
அம்மளுக்கு ரோஷ கூந்தல் பொங்கிருச்சு...அப்புறம் அம்ம கூகுள் ஆண்டவரை கைல புடிச்சிக்கிட்டு தேத்தண்ணி இசுக்கோத்து பல்லுல கூட படாம தேடா தேடி அந்த ஆதாரத்தைக் கண்டு போட்டோமுங்கோ...
நாலு கொமரைக் கரையேத்துன சந்தோஷம் எனக்கு வந்திச்சுன்னா பாத்துக்குங்க..
ஆதாரம் : " ஏம்பேரு ஒமரு..எனக்கு நாலு கொமரு "


மே 17 ம் நாள் 1912 ஆம் ஆண்டு ஒரு மீட்டங்கி அதுல அம்ம சாதி சனத்துல பெறந்து சக்கப் போடு போட்ட துப்பாசு நன்னா கலந்துகொண்ட மீட்டங்கி அதை ஆதாரமாக கட்டம் கட்டி காட்டியிருக்கிறேன்.....


இந்த ஆதாரத்துடன் நீண்ட இடைவெளி ஒன்று விடலாம் என்று இருக்கிறேன்.
அபிராமத்தில் உள்ள நல்ல வகையறாக்களைப் பற்றிய விசயங்களைச் சேகரித்து "கிளப்பி . கிட்டங்கி , பங்கா மார்க்கா , சக்கரம் மார்க்கா இன்னும் எத்தனையோ ( விடுபட்டதை இன்பாக்ஸில் எழுதுங்கள்..) குடும்பங்களின் சுவராசியத்தை உள் வாங்கி பின் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அதற்கு கண்டிப்பா நீண்டதோர் இடைவெளி மிகவும் அவசியம்...தங்களிடம் உள்ள புகைப்பட ஆதாரங்கள் , கடிதங்கள் , டைரிகள் , ஏதும் இருந்தால் என்னிடம் கொடுக்கவும்..
விடைபெறுகிறேன்....விரைவில் வருவேன்..
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
அன்புடன்
அ.ப.சாகுல் ஹமீது.

The Great Dubash and Vijayan families...

" பாம்புன்னா புத்து இருக்கனும்
பருப்பு கடைய மத்து இருக்கனும்
தென்னை மரம்னா நெத்து இருக்கனும்
துபாஷ் விஜயன்னா கெத்து இருக்கனும் "



புளி விக்கிற , புண்ணாக்கு விக்கிற , புஸ்வாணம் விக்கிற பார்ட்டி கூட இப்ப விசிட்டிங் கார்டு வெச்சுக்கிட்டு லாவுச மாவுச அடிக்குதுக..


அப்ப அம்ம கெத்து பார்ட்டிக எப்புடி இருந்துருக்கனும்..விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தின் விசிட்டிங் கார்டு ( 1930 களில் ) ஒன்றை கண்ணுக்கு கண்ணாகச் சேமித்து வைத்து இங்கு வெளியிட்டுள்ளேன்.





இதில் குறிப்பிடப்பட்டுள்ள " காசீம் பிரதர்ஸ் " என்பது கான்பகதூர் துபாஷ் காதிறு சாஹிப் ஆரம்பித்த நிறுவனம்...காசீம் என்பது அவருடைய மகன் ஒருவரின் பெயர்.. இதில் தான் மானேஜிங் பங்காளியாக விஜயன் அம்பலம் இருந்தார்.
" விஜயன் அம்பலம் " என்ற பெயர்க் காரணம்....
இராமநாதபுரம் சேது மன்னரின் சேவையில் சிறந்து விளங்கிய அபிராமம் நூர்முஹம்மது என்பவருக்கு சேதுபதி மன்னர் சிறப்புகள் செய்து " விஜயன் அம்பலம் " என்ற விருதுப் பெயரையும் வழங்கினார்.( விஜயன் குடும்பங்களில் "நூர்,மீரா " என்ற பெயர்கள் நிறைய நபர்களுக்கு சூட்டப்பட்டு வருவதை இன்றும் நாம் காணலாம்). இந்நிகழ்ச்சி நடைபெற்று இருநூறு வருடங்களுக்கு மேலாகிறது.அவரது வழி வந்த வள்ளல் ( அப்துல் ரஹிமான் ) ஒருவரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரான சோதுகுடி அப்துல் காதிர் ராவுத்தர் அவர்கள் " விஜயன் அப்துல் ரஹ்மான் அகப்பொருட் பல்துறைக்கோவை " ஒன்றைப் பாடியுள்ளார்.



ஆதாரம் : வரலாற்று ஆய்வாளர் எஸ்.எம் கமால் அவர்கள் எழுதிய " முஸ்லீம்களும் தமிழகமும் " என்ற நூல்...( புகைப்பட ஆதாரம் இணைப்பில் )


1930 ஆம் வருடம் இரங்கூன் மாநகருக்கு இந்தியாவின் பின்னாளில் 3வது குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாஹீர் ஹுசேன் அவர்களும் , இஸ்லாத்துக்காகவும் , இந்தியாவுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த தியாகி மௌலானா முஹம்மது அலி ஜௌஹர் அவர்களும் விஜயம் செய்தபோது " சோலிய முஸ்லீம் சமூகத்தின் அன்றைய தலைவரான விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலமும் , சோலிய முஸ்லீம் சமூகத்தின் இளைஞர் அணிச் செயலாளரான அறிஞர் அல்லாமா மு.கரீம் கனி அவர்களும் சங்கத்தின் சார்பாக வரவேற்றனர்.
அடுத்த நாள் மாநாடு ஆரம்பிக்க இருக்கும் நிலையில் கௌரவ விருந்தினர்கள் இருவரும் ஏரிக்கரை ஒன்றின் ஓரத்தில் அமைந்த விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தின் அழகிய பங்களாவில் தங்கினர் அவர்களுக்கு பர்மிய , இந்திய உண்வு வகைகள் பரிமாறப்பட்டன..அந்த ஒரு நாள் சந்திப்பில் பல விடயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.


மேற்கண்ட நிகழ்வுகளை அறிஞர் அல்லாமா மு.கரீம் கனி அவர்கள் தான் எழுதிய " நான் கண்ட மாணிக்கம் " என்ற நூலில் குறிப்பிடுகிறார் ( புகைப்பட ஆதாரங்கள் பதிவில்.)
நீதி : " இருந்தாலும் இறந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும் "

Google Search

Popular Posts