மாறியது நத்தம் மாறாதது கௌரவம்!!!
நத்தத்து ஆண்மக்கள் அனைவரின்
உடலிலும் பர்மா கோட்டு! பர்மா கைலி!
வீசைக்கணக்கில் கிடைத்த கறி மீனில்
வித விதமாய் உணவுவகைகள்!
நெஞ்செலும்பு சூப்பு வைத்து
நித்தம் நித்தம் இடியாப்பம்!
பஞ்சு பரட்டா குஞ்சு கோழி
பசியார பதமாய் வரும்!
ஆசைக்கிழத்திக்கு அறுபது பவுனில்
அழகிய ஒட்டியாணம்!
பர்மாவில் ஆறு மாசம்!
பாச ஊரில் ஆறு மாசம்!
இவ்விரு ஊர் மனைவிகளுக்கும்
எப்போதும் ஆறு மாசம்!
பர்மா சுருட்டு ஊதிக்கொண்டே
கிராம போன் இசைத்தட்டில்
இந்திப் பாட்டு இசை முழக்கம்!
பர்மா அடைக்கப்பட்டது!
பணங்கள் முடக்கப்பட்டது!
கோட்டை கொத்தளங்களில்
கோடியில் புரண்ட மக்கள்
கோடித்துணியின்றி ஓடி
வருகிறார் உற்ற ஊரை நாடி!
வெள்ளிப்பாத்திரங்களும்
பர்மா தேக்குகளும்
கொல்லைப்புரத்து வழியாக
புதுப் பணக்காரர்களின்
வீடு தேடிப் போனதால்
கௌரவமாய் கழிந்தது
கடந்த காலம்!
இன்று சொந்த கிராமங்களை
சொற்ப விலைக்கு விற்று
சோகமாய் போகிறது சொச்ச காலம்!
சவுதி சிங்கப்பூரில் வேலை இருந்தும்
மவுனம் காக்கிறது மானம் ரோசம்!
இன்றும் என்றும் பர்மா பழைய கைலியை
பரிவாய் வருடிக்கொண்டே பாதி நாட்களில்
பயணம் மேற்கொண்டு முடிவை நோக்கி
நொடிகளை எண்ணுகிறது பாழாய்ப்
போன கௌரவ நெஞ்சம்!
மாறியது நத்தம் மாறாதது கௌரவம்!!!
****************************************************
பர்மா அடைக்கப்பட்டபோது எழுதப்பட்ட
கல்கியின் கதையைப் படிக்க
இங்கே சொடுக்கவும்!!

Google Search

Popular Posts